அக்பர் பீர்பால் கதைகள்!!


ஒரு வினோதமான கனவை ஒருமுறை சக்கரவர்த்தி அக்பர் இரவில் கண்டார். தூக்கம் தெளிந்து காலையில் எழுந்த உடனேயே அக்பர்  வருத்தத்துடன் காணப்பட்டார். அப்படி என்ன கனவு அது என்று யோசிக்கிறீர்களா?! தனது ஒரே ஒரு பல்லை மட்டும் தவிர்த்து  அவரின் அனைத்து பற்களும் உதிர்ந்து போய்விட்டது போல கனவு கண்டிருக்கிறார் அக்பர். இதனால் மிகுந்த மன குழப்பத்திற்கு உள்ளான அக்பர், உடனேயே அரசவைக்கு ஜோதிடர் ஒருவரை வரவழைத்தார். அந்த ஜோதிடரிடம் தான் கண்ட கனவைப் பற்றி எடுத்துக்கூறிய அக்பர், இந்த கனவு எதனை குறிக்கிறது என்று கேட்டார்.

அக்பர் கூறியதைக் கேட்ட ஜோதிடர் சிறிது நேரம் கழித்து அவரிடம்,  "சக்கரவர்த்தியே! நான் இதை சொல்வதற்கு முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கண்ட கனவு எதை குறிக்கிறது என்றால், உங்களது உறவினர்கள் அனைவருமே நீங்கள் இறப்பதற்கு முன்னரே இறந்து விடுவார்கள் என்பதை குறிக்கிறது" என்று சொன்னார். ஜோதிடரின் பதில் அக்பருக்கு வருத்தத்தை அதிகரிக்கச் செய்து மன குழப்பத்தையும் அதிகரித்தது. வழக்கமாக ஜோதிடருக்கு பரிசுகளை அளிக்கும் அக்பர், இந்த முறை அவருக்கு பரிசளிக்காமலேயே அனுப்பிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து பீர்பால் அரசவைக்கு வந்தார். பீர்பாலை கண்ட அக்பர் அவரை அழைத்து தான் இரவில் கண்ட கனவைப் பற்றி பீர்பாலடமும் கூறினார். ஜோதிடரை போலவே பீர்பாலும் அக்பர் கூறியதை முழுவதுமாக கேட்டுக்கொண்டார். அக்பர் பீர்பாலிடம் "எனது இந்த கனவு எதை குறிக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா? என வினவினார்.

சிறிது நேரம் சிந்தித்த பீர்பால், அக்பரிடம், "சக்ரவர்த்தியே! உங்களது இந்த கனவானது நீங்கள் உங்களது எல்லா உறவினர்களை விடவும் நெடுநாள் இந்த பூவுலகில் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் என்பதை குறிக்கிறது" என கூறினார்.

பீர்பாலின் பதிலைக் கேட்ட அக்பர் பூரித்துப் போய் மனக்குழப்பத்தை விட்டுவிட்டு ஆனந்தம் அடைந்தார்...!! அதனோடு பீர்பாலுக்கு பல பரிசுப் பொருட்களையும் பரிசளித்து மகிழ்ந்தார் சக்ரவர்த்தி அக்பர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.