சுனாமியில் உயிரிழந்தோருக்காக 2 நிமிட மௌன அஞ்சலி!!
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய, ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று(26) காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.
ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.
இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.
ஆசிய நாடுகளில் 227,898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது.
அத்துடன், பல்லாயிரங்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது.
இந்து சமுத்திர நாடுகளில் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளும் உடைமைகளும் சேதமாகின.
இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30,196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டதுடன் 21,411 பேர் காயமடைந்தனர்.
500,000க்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.
அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகள் சேதமடைந்தமையினால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்படைந்தன.
ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் 2004 ஆம் ஆண்டுவரை அறிந்திருக்காத மக்கள், கடலில் திடீரென ஏற்பட்ட ஆழிப்பேரலையை ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்றனர்.
இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடல் கோளுக்கு இறையாகின.
இதன் பின்னர் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தொடர்பான அச்சமும் அது தொடர்பான விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கின.
இந்நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டு சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.
இன்றைய தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில், ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் சூரியனின் செய்திச் சேவையும் தன்னை இணைத்துக்கொள்கிறது.
நாடளாவிய ரீதியாக சர்வ மத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹிக்கடுவையில் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை