பெண்களுக்கெனத் தனிக் கடற்கரையா?

 

பங்களாதேஷின் முக்கிய உல்லாசத்தலத்தில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமெனக் கடற்கரையில் தனிப் பகுதியை ஒதுக்கும் திட்டம் ஒன்று கைவிடப்பட்டுள்ளது.

பாலினத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுவதற்கு எதிராகச் சமூக ஊடகத்தில் குறைகூறல்கள் எழுந்ததை அடுத்து, திட்டத்திலிருந்து அதிகாரிகள் பின்வாங்கினர்.

உலகின் ஆக நீளமான இயற்கைக் கடற்கரையின் ஒரு பகுதி பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமென ஒதுக்கப்படும் திட்டம் நேற்று முன்தினம் (டிசம்பர் 29) அதிகாரபூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது.

ஆண்களோடு சேர்ந்து கடலில் குளிப்பதற்கும் கடற்கரையில் ஓய்வெடுப்பதற்கும் பெண்களில் பலர் கூச்சப்படுவதாகக்கூறி அவ்வாறு செய்யப்பட்டது.

ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே அந்தத் திட்டம் மீட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகத்தில் வெளியான பலரது குறைகூறல்களே அதற்குக் காரணம்.

பாலின அடிப்படையிலான ஒதுக்கலை ஆதரிக்கும் சமயவாதிகளுக்கு, அரசாங்கம் துணைபோவதாகப் பலரும் குறைகூறினர்.

வேலையிடத்திலும் தொழிற்சாலைகளிலும் ஆண்களையும் பெண்களையும் பிரித்துவைக்க வேண்டுமெனப் பழமைவாதச் சமயத்தரப்பினர் வலியுறுத்தி வரும் வேளையில், இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.