திருடன் என நினைத்து பெற்ற மகளை சுட்டுக்கொன்ற தந்தை!

 


அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம் கொலம்பஸ் நகரம் பிபர் பெண்ட் டிரைவ் பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ்டன். இவருக்கு ஜெனி (16 வயது) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு ஹரிஸ்டன், மனைவி இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு மறுநாள் 26-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஜெனி தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்புறம் வழியாக ஜெனி வந்துள்ளார்.

ஆனால், வீட்டின் பின்புறம் வழியாக யாரோ நுழையும் சத்தம் உறங்கிக்கொண்டிருந்த ஹரிஸ்டனுக்கு கேட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த ஹரிஸ்டன் வீட்டிற்குள் யாரோ திருடன் நுழைந்துவிட்டான் என நினைத்துள்ளார். மேலும், திருடனை தடுக்க வேண்டும் என எண்ணிய ஹரிஸ்டன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார்.

அங்கு இருட்டில் ஒருநபர் வீட்டிற்குள் நுழைய முயற்சிப்பதை பார்த்துள்ளார். அது திருடன் தான் என நினைத்த ஹரிஸ்டன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அந்த நபர் மீது சுட்டுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் அந்த நபர் சுருண்டு விழுந்தார். குண்டு பாய்ந்ததும் ஜெனி கதறி அழுதுள்ளார். தனது மகளின் குரல் கேட்பதை அறிந்த ஹரிஸ்டன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார்.

அங்கு தனது மகள் ஜெனி துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக, ஹரிஸ்டன் தனது மனைவியை அழைத்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார்.

தகவலறிந்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்த ஜெனியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களேயே ஜெனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஜெனியின் தந்தை ஹரிஸ்டன் மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஜெனி வீட்டின் பின்புறம் எதற்கு சென்றார்? உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடன் என தவறுதலாக நினைத்து பெற்ற மகளை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.