புதுவருடத்திலாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்!!

 


அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீட்சி அளிக்கவும், இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதிக்கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது . அவர் சர்வதேசத்துக்கும் விட்டு சென்ற  நல்லிணக்க செயற்பாடு புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு சென்ற கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அன்னிய செலவாணி பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்பன முழு நாட்டையும் பயத்திற்குள் தள்ளி இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் வெளி சக்திகள் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் நிலை உருவாகலாம். அத்தகைய ஆபத்தும் உள்ளது. இந்நிலையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் மக்களுக்கு நாட்டின் மீது நம்பிக்கையை துளிர்விட செய்யவும் மக்கள் சக்தியை பலமடைய செய்வதன்  அடையாளமாகவும் நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை பிறந்திருக்கும் புது வருடத்தில் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக பல்வேறு காலகட்டங்களில் அடையாள உண்ணா விரதத்தை ஆரம்பித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திய போதும் அவர்களுக்கு அரசியல்வாதிகளாலும் ஆட்சி தரப்பினராலும் விடுதலை தொடர்பில் கொடுக்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரச தரப்பினரால் அரசியல் கைதிகளின் விபரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் திரட்டப்பட்ட போதும்  விடுதலை இன்னும் கைகூடவில்லை என்பது வேதனைக்குரியது.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விடவும் அதிக காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து தங்கள் வாழ்வை இழந்து விட்டனர். அத்தோடு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கின்றனர். இது நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை தீர்ப்பை விட பாரிய தண்டனையாகும். இத்தகைய தண்டனையை இவர்கள் தொடர்ந்தும் அனுபவிக்க இடம் கொடுப்பது அடிப்படை மனித உரிமை மீறும் செயலாகும் என்பதால் இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசியல் நீதியை எதிர்பார்த்து இருக்கும் மக்களின் அபிலாசையாகும்.


மேலும் நீண்ட காலம் சிறையில் வாழ்வதைவிட தண்டனையை அனுபவித்து குறுகிய காலத்தில் குடும்பத்தோடு கொண்டு சேரலாம் என்ற நோக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை பலவந்தமாக ஏற்றுக் கொண்ட அரசியல் கைதிகளும் உண்டு. இத்தகைய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைமை ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்தோடு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் எந்தவித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத  நிலையிலும், குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீண்டகாலமாக சிறைக்குள்  தள்ளி அவர்கள் வாழ்வை பறித்து அழித்தது பயங்கரவாத தடை சட்டமா? அல்லது பாதுகாப்பு துறையினரின் தீவிர இனவாத நோக்கமா? இந்நிலையில்  சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்பகொடூர பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  அகற்றி பாதிக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க புது வருடத்தில் இவர்களை விடுதலை செய்வதற்கு ஆட்சியாளர்கள் வழிவகுக்க வேண்டும்.


அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நீண்ட காலம் சிறையில் தடுத்து வைத்திருப்பது குற்றச் செயலாகவே நாம் பார்க்கிறோம்.  அவரின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இருந்து மீட்சி அளிக்கவும் இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதிக்கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது  விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.