தோல்வி நிச்சயம் ஆன பின்னும் களம் நோக்கி விரையும் என் மகளே....!!
களத்தில் இருந்து மீண்டு விடு என்று சொல்லத்தான் ஆசை..
ஆனால் சொல்ல முடியவில்லை,
ஏனெனில், உன் தேசத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன,
போரின் முன்னரங்கு உன் முற்றம் தேடி வந்து விட்டது,
தோல்வி நிச்சயமென ஆன பின்னும், களம் நோக்கி விரையும்
என் மகளே கேள்!
தந்தையின்பரிவோடு
சொல்கிறேன், "களத்தில் இருந்து மீண்டு விடாதே"!
தயவு செய்து களத்திலிருந்து நீ மீண்டு வந்து விடாதே!
மகளே! நீ முன்னரங்கில் நின்று மாயும் போது,
தப்பினால் போதும் என்று பின்னங்கால் அடிபட, தலை தெறிக்க ஓடி ஒளிந்து கொள்பவனும்,
அடி பங்கருக்குள் அசையாமல்
கிடப்பவனும்,
வெடியோசை கேட்டு நடுங்கி போய் நாக்குத்தள்ள சேடம் இழுப்பவனும்,
எதிரியைக் கண்டு சிறுநீர் கழிப்பவனும்,
சண்டையின் முடிவில் எந்த சேதாரமுமின்றி திரும்பி வருவான்,
கூட்டு கோழியின் சிலிர்ப்புடன், பார்க்க வடிவாக இருப்பான்,
ஐயா வாங்கோ,
ஐயா வாங்கோ என்று
கூனிக் குறுகி முதுகு வளைந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு கம்பளம் விரிப்பான்,
எதிரி கட்டிய கோவணத்தை,
கெஞ்சி கூத்தாடி கேட்டு வாங்கி,
தனக்குத்தானே அதைத் தலைப்பாகையாக
கட்டிக்கொள்வான்,
மகளே நீ களத்தில் இருந்து மீண்டு வந்து விடாதே........
நாளை நம்மை ஆளப்போகும் ஆக்கிரமிப்பாளனின் அரசில் எஞ்சியிருப்பது,
களம் காணப் பயந்தொடுங்கி
தப்பியவன் மட்டுமே .
பிரமுகர்,அதிகாரி, அரசியல்வாதி
என்ற பகட்டான பட்டங்கள்கூட இவர்களுக்கு இலகுவில் கிடைத்துவிடும்,
மீண்டும் சொல்கிறேன் மகளே...
களத்தில் இருந்து மீண்டு வந்து விடாதே!
போருடன் சிறையும் முடிந்து நீ ஊர் வரும்போது,
உனக்காக இங்கு எதுவும் காத்திருக்கப் போவதில்லை,
உன் உடல் தாங்கிய விழுப்புண்கள் மட்டும் உன்னோடு எஞ்சியிருக்கும்,
ஒருவேளை...
நீ பிச்சை எடுத்து வாழ்வதற்கு அது உதவக்கூடும்,
இன்னும் சொல்கிறேன் கேள் மகளே........
எதிர்நின்று சமராடிய பகைவன் கூட பரிவோடு இருக்கக்கூடும்,
ஆனால்,போருக்கு அஞ்சிய நம் கோழைகள் சிலர் உன்னை
நாசம் செய்வதில் குறியாக இருப்பர்..
பெண்ணென்ற
மின்னும் பொதி செய்து
குடும்ப கொட்டடியில் சிறை இடுவர்..
போருக்கு அஞ்சிய
நாற்றுக்கள் முளைக்கும் நிலமாக -நீயும் உன் பெருமை அனைத்தும் மறந்து.
பொறுமையோடு வாழக்கூடும்...
ஆகவே தான் மகளே அருள்கூர்ந்து வேண்டுகிறேன்,
களம் மீண்டு வந்து விடாதே!
ஏனெனில், உற்ற தோழனாய் உன்னை விட்டு பிரியாத,
உன் உடலின் காயங்களும், மனதின் வடுக்களும் மட்டுமே, உனக்காக எஞ்சியிருக்கும்.
விழுந்துபோன தேசம்ஒன்றிலிருந்து அன்பான தந்தை..
இ.உயிர்த்தமிழ்.
கருத்துகள் இல்லை