இலங்கை முஸ்லிம்களை தனியான கலாச்சாரத்தை கொண்ட, தனியொரு இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் - மனோ

 


தமிழ்-முஸ்லிம் ஐக்கியமும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளமும்> சற்று முன் என்னுடன் உரையாடிய ஒரு நண்பருக்கு சொன்னேன்; 

இலங்கை வாழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையோரின் தாய்மொழி தமிழ். ஆனால், அவர்கள் தெரிவு செய்யப்பட்ட தமது அரசியல் பிரதிநிதிகள் மூலமாக,  தம்மை தனியொரு இனமாக அறிவித்துக்கொண்டுள்ளார்கள். 

ஆகவே இலங்கை முஸ்லிம்களை தனியான கலாச்சாரத்தை கொண்ட தனியொரு இனமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.   

இதைவிடுத்து, பிடிவாதமாக அவர்களை, “இஸ்லாமிய தமிழர்” என்றும், அதை நியாயப்படுத்த தமிழர்களை “இந்து தமிழர்” “கத்தோலிக்க தமிழர்” என்றும்  இன்னமும் பிரிக்க முயல்வது மடைமை. 

இலங்கைக்குள்ளே தமிழர்களின் தனித்துவங்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களின் தனித்துவங்களை தமிழரும் பரஸ்பரமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழர், முஸ்லிம்கள் இடையே ஐக்கியத்தை கட்டி எழுப்பலாம். 

“தமிழரின் தனித்துவங்களை அங்கீகரியுங்கள், அதன்மூலம் தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்புவோம்”, என்றுதானே சிங்களவர்களிடம் தமிழர்கள் கூறுகிறார்கள். அதுபோன்று தான் இதுவும்.  

தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் வரலாறும், நிகழாறும், இலங்கை முஸ்லிம்களில் இருந்து வேறுபடுகிறது. இலங்கையில், தாம் தனியான ஒரு  இனம் என்று அரசியல்ரீதியாகவே சொல்லும் நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அங்கே அப்படி அல்ல. ஆகவே தமிழகத்தை இங்கே கொண்டு வந்து ஒப்பிடுவது மடைமை.  

இலங்கையில் முஸ்லிம்கள் நாளை தமிழ் மொழியையே முற்றாக நிராகரித்து விட்டு, இங்கே கொழும்பில் நிகழ்வது  போன்று, அனைவரும் சிங்களம் கற்க முடிவு செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தமிழ் ஒன்றும் அழிந்து போய் விட போவதில்லை. தமிழை மறந்தால் அது அவர்களுக்குதான் நஷ்டம்.  ஆனால், அது அவரவர் விருப்பம். 

ஆகவே பொது பிரச்சினைகளில் அனைவரும் கலந்து பேசலாம். அவரவரின் தனித்துவ  பிரச்சினைகளில் தனியாக போராடி கிடைப்பதை வெவ்வேறாக பெற்றுக்கொள்ளலாம். 

இதுதான் இலங்கையில் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரணில்லாத நிம்மதியான வாழ்க்கைக்கான வழி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.