கன்றுக்குட்டியும் பல்லக்கும்!!


ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக்குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக் குட்டியைத் தேடி வரும்படி ஏவினார்.

அவர்கள் நால்வருமாகச் சேர்ந்து, “சாமி, பல்லக்குத் தூக்குவதுதான் எங்கள் வேலை; கன்றுக்குட்டியைத் தேடுவது எங்கள் வேலையல்ல” என்று சொல்லி விட்டனர்.

உடனே மடாதிபதி, “சரி, நானே கன்றுக்குட்டியைத் தேடப் புறப்படுகிறேன். பல்லக்குத் தயாராகட்டும்” என்றார்.

வெற்றிக் களிப்புடன் பல்லக்கைக் கொண்டு வந்தனர்.

மடாதிபதி அதில் ஏறி அமர்ந்து, ஊர் முழுவதும் பெரிய சாலைகள் எல்லாம் அலைந்து, பிறகு, சந்து பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லக்கைக் கொண்டு போகச் சொன்னார். மிகக் குறுகிய, நெருங்கடியான சந்துகளில் எல்லாம் போக முடியாமல் கஷ்டப்பட்ட அந்த நால்வரும், பல்லக்கைக் கீழே இறக்கி வைத்து,

“சாமி, தாங்கள் இங்கேயே இருங்கள்... நாங்களே போய்க் கன்றுக்குட்டியைத் தேடி வருகிறோம்” என்றனர்.

உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, “இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும், என்னையும் சுமந்து வந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே!” என்றார்.

அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்பட்டனர்.

இப்படிப்பட்ட வேலையாட்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

                            நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.