மக்கள் மனங்களை வென்றவன் லெப். கேணல் கௌசல்யன்...!

 

தேச விடுதலைக்காக துரோகத்தின் முகத்திரை கிழித்து! மக்கள் மனங்களை வென்றவன் லெப். கேணல் கௌசல்யன்.

தமிழர் தாயகமான தமிழீழத்தின் தென் தமிழீழ மண்ணும் மக்களும் இந்த விடுதலை போராட்டத்துக்கு அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய உறுதிமிக்க போராளிகளை உவந்தளித்துள்ளமை என்றுமே தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
உன்னதமான தலைவனின் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட கொள்கையை ஏற்று புறப்பட்ட அனைவருக்குப் பின்னாலும் நீண்ட வரலாற்று தாக்கங்கள் குடிகொண்டு இருந்தன.

தங்கள் கண்கள் முன்னால் சிங்கள அரச பயங்கரவாதத்தால் சொந்த உறவுகள் சுட்டு கொல்லப்பட்டதையும் தங்கள் பூர்வீக நிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் தங்கள் தமிழ் மொழி,கல்வி, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இழக்கப்பட்டு வருவதையும் உணர்ந்த ஒவ்வொரு தமிழ் மக்களும் தாம் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால் தமிழீழ தேசிய விடுதலைப்போரட்டத்தில் இணைந்து போராடுவதை தவிர வேறு எந்த தெரிவுகளும் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது.
ஒரு விடுதலைப் போராட்ட வீரனின் வரலாறு ஆனது சாதித்த சாதனை, தியாகம், மக்கள் மீது கொண்ட பற்று என்பன எல்லாம் அவனின் வீரச்சாவின் பின்புதான் போற்றப்படும்.
நமது போராட்ட வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் சர்வதேச கவனத்தின் பார்வையில் இருந்த வேளையில் தென் தமிழீழ மண்ணில் நடைபெற்ற தேச விரோத சகதிக்குள் சிக்குள்ள வைத்த கருணாவின் துரோக தனத்தை முகம் கிழித்து உண்மைத்துவமான தூய்மையான போராளியாக மக்களை வழிப்படுத்த முன்வந்த முதுபெரும் போராளிதான் லெப்.கேணல் கௌசல்யன்.
05.02.2005 மாலை 5 மணி மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்கள் பிரிவு சார் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடல் திலீபன் முகாம் இது எமக்கு அனுப்பி வைக்கப்படும் குறுந்தகவல் சுருக்கம்.
வழமையாக அரசியல் துறை பொறுப்பாளரின் கூட்டமெனில் அரசியல் துறை நடுவப்பணியகம், சமாதான செயலகம், தூயவன் அரசறிவியல் கல்லுாரி என்பவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபெறும்.
தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கூட்டம், ஒன்றுகூடல் திட்டமிட்ட நேரத்துக்கு சரியாக நடக்கும் அவரும் எந்தவொரு கூட்டமாக இருந்தாலும் மக்கள் கலந்துரையாடலாக இருந்தாலும் திட்டமிட்ட நேரத்துக்கு அங்கு நிற்பார்.

இது அவரது நடைமுறை என்பதை தமிழீழ தேசியத்தலைவரிடம் கற்றுக்கொண்ட விடயங்களில் முக்கியமானது என்று அடிக்கடி கூறுவார் அதேபோல் அனைத்து போராளிகளையும், பொறுப்பாளர்களையும் வளப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரால் உருவாக்கபட்ட பொறுப்பாளர்களில் கௌசல்யனும் ஒருவர் இவ்வாறு 05.02.2005 அன்று லெப்.கேணல் கௌசல்யன் கலந்துகொள்ளும் கடைசிச்சந்திப்பு என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
சந்திப்புக்கு 10 நிமிடத்துக்கு முன்பாக தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் கௌசல்யனும் தமிழீழ தேசியத்தலைவரிடம் சந்தித்து பேசிய விடயங்கள் அவர் தெரிவித்த ஆலோசனைகள் மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்கான ஒழுங்கு படுத்தல்கள் ஆழிப்பேரலைக்கு பின்னதான உடனடி மனிதாபிமான வேலைத்திட்டங்கள், கருணாவின் துரோகத்தனத்திற்கு பின்னதான போக்குகள் தமிழ், முஸ்லீம் மக்களின் நல்லுறவுகளைப் பேணுதல் என அனைத்திற்கும் தமிழீழ தேசியத்தலைவர் தெளிவான வழிகாட்டலை ஏற்படுத்தி நம்பிக்கை ஊட்டியதை நினைவுபடுத்தி கொள்கின்றனர்.

அத்தனை சுமைகளையும் ஒரு தனிமனிதனாக கௌசல்யன் தாங்கிச்சென்று அனைத்துப் போராளிகளுடன் இணைந்து செயல் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது.
தமிழீழ அரசிற்குரிய நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட அரசியற்துறை சார்ந்த அனைத்து நிர்வாகங்களும் சரியான வகையில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறையில் செயற்படுத்த வேண்டுமென உறுதியாக நின்றவன்.

சமாதான காலப்பகுதியில் மக்களுக்கான உச்சமான அரசியல்ப் பணியினை செயற்படுத்த அரசியல்துறைக்கு உட்பட்ட தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழ கல்விக்கழகம், தமிழீழ மாணவர் அமைப்பு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ தாயகத்திற்கான திட்டமிடல் செயலகம், தமிழீழ விளையாட்டு துறை, தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம், ஊரக வளர்ச்சி திட்டம், புலிகளின் குரல், ஈழநாதம், கல்விக்கு குழு, கொள்கை முன்னெடுப்பு பிரிவினர், வெளியீட்டு பிரிவு என கிளிநொச்சியில் நடுவகப்பணியகம் அமைத்து செயற்படுத்திய தமிழீழ பொறுப்பாளர்கள் அனைவரையும் தமிழீழ தேசியத்தலைவரின் ஆலோசனை, வழிகாட்டலுடன் ஒரே காலப்பகுதியில் மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கு முன்னகர்த்தி மக்களுக்கான அரசியற் பணியை முன்னெடுத்தவர் அத்துடன் ஏனைய புலனாய்வுத்துறை தமிழீழ காவற்துறை, நீதி நிர்வாகத்துறை, நிதித்துறை, படைத்துறை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் தளபதிகளுடன் இணைந்து தாயாக விடுதலை வீச்சை விரைவு படுத்துவதில் இலக்காக இருந்தவர்.

அரசியல் பணியென்பது ஒரே நிர்வகக்கட்டமைப்புக்குள் ஒரே அரசின் கீழ் செயற்ப்படுத்துவது இலகுவான காரியம் அல்ல ஆனால் லெப். கேணல் கௌசல்யன் அரசியல் பொறுப்பு வகித்த காலம்மென்பது சர்வதேசத்தின் அனுசரணையுடன் சமாதான நல்லெண்ண பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருந்தகாலம்.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் ஒப்புதலுடன் ஸ்ரீ லங்கா அரச படை நிர்வாக மையங்கள் கட்டுப்பாடுக்குள் இருந்த வேளையில் மக்களுடனான அரசியற் பணியை செய்ய வேண்டிய பொறுப்பு அரசியற் துறை நிர்வாகங்களை இராணுவ கட்டுப்பாட்டுபிரதேசங்களில் நிறுவி அரசியற் பணி செய்யவேண்டிய பொறுப்பு கெளசல்யனையே சார்ந்து இருந்தது.
அவ்வேளையில் ஸ்ரீ லங்கா அரச படையினர் திட்டமிட்டு எமது அரசியற் பணியை முடக்குவதற்கு பல்வேறு இராணுவ அழுத்தங்களை பிரயோகித்து வலிந்து சமாதான முயற்சிகளை குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளைகளிலெல்லாம் உண்மை நிலையை எமது நியாயமான நிலைப்பாட்டை சமாதான உண்மை முகத்தை பொறுமையுடன் காத்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் எடுத்து கூறி தென் தமிழீழ மண்ணில் சமாதான முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியதுடன் ஸ்ரீ லங்கா அரசின் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல்களை உடனுக்குடன் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு வெளிக்கொண்டு வந்தவன் தான் லெப்.கேணல் கௌசல்யன்.

தமிழ்- முஸ்லீம் மக்கள் உறவு என்பது தாயாக பிரதேசத்தின் மொழியையும் வாழ்விடங்களையும் கொண்டு பிரிக்க முடியாத உறவு கடந்தகால போர் சூழலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்டு தங்களின் நலனிற்கு ஏற்ப பிரித்தாளும் தந்துரோபாயங்கள் மூலம் இரு மக்கள் கூடத்தினரிடையே விரிசலை ஏற்ப்படுத்தியதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் மட்டு அம்பாறை மாவட்டங்களை கபளீகரம் செய்து தனது நிர்வாக அலகுகளை விரிவாக்கம் செய்து வந்தமையையும் இதனால் தமிழ்-முஸ்லீம் மக்கள் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு ஏதிலிகளாக வாழ்வதையும் உணர்ந்தவர்கள்.
இவர்களுக்கான தீர்வை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் மூலம் தான் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் சமாதான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகுகள் அனைத்து இடங்களிலும் வியாபித்து நின்ற வேளையில்,
முஸ்லீம் மக்களுடனான நெருக்கமான உறவினை பேணி அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் தேவைகளை கவனித்து கொண்டு முஸ்லீம் மக்கள் சார்ந்த அமைப்பு பிரதிநிதிகளுடனும் அதற்க்கான தீர்வினை காண்பதிலும் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் என்பது தமிழ்-முஸ்லீம் மக்களின் முழுமையான விடுதலைக்கானது என்பதை தமது அரசியற்ப் பணியில் அணுகு முறை மூலம் நிருபித்து காட்டியவன் லெப்.கேணல் கௌசல்யன். முஸ்லீம் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய போராளி.

தமிழீழ தேசியத்தலைவர் உண்மைத்துவமான அரசியற் பணியை எவ்வாறு செய்ய வேண்டுமென எதிர் பர்த்தாரோ அதனை நிறைவாக செய்ய துடிக்கும் போராளி. சமாதான காலம் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழர் தாயாக பகுதியில் மக்களுக்கான நிவாரணம் ,புனர்வாழ்வு அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி மனிதநேய பணியை செய்யப்போகின்றோம் என்ற போர்வையில் படையெடுத்து வந்தகாலம் அதற்கெனவும் தமிழீழ தேசியத்தலைவர் அதற்க்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தி இருந்தார்.

அரசியற் துறையின் கீழ் உருவாக்கப்பட்ட தாயாக திட்டமிடலுக்கான திட்டமிடல் செயலகம் ஆகும். இதன் மூலம் எந்த மாவட்டத்தில் எவ்வாறான முன்னுரிமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை ஆலோசனை வழிகாட்டல்களை எல்லாம் செயற்ப்படுத்தியது இவ்வாறு மட்டு.அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்கள் எங்கு எப்படி எவ்வாறு முதன்மை படுத்தி செய்ய வேண்டி உள்ளது என்பதை சம்மந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளூர் சமுக கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்திட்டங்களை செயற்ப் படுத்துவதற்க்கான அனைத்து நெறிப்படுத்தளையும் செவ்வனே செய்தவன் லெப்.கேணல் கௌசல்யன்.
தனியொருவனின் துரோகத்தால் சர்வதேச பார்வை ஒருபுறம் புலம் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டம் மீது வைத்திருந்த அதிருப்தி நம்பிக்கையீனத்தை மீள் தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்குரிய காலத்தில் லெப். கேணல் கௌசல்யனின் ஐரோப்பிய பயணமும் அமைந்திருந்தது.

புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கு தேச விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்ட தனியொருவனின் துரோகத்தை தெளிவுபடுத்தி தென் தமிழீழ மக்களின் விடுதலை உணர்வையும் அங்கு படையணி போராளிகளின் விடுதலை உறுதியையும் வெளிக்கொண்டு வந்ததுடன் தொடர்ந்து புலம்பெயர் மக்கள் இந்த விடுதலைப் போராட்டத்துக்கு பற்று உறுதியுடன் மிக வேகமா உழைக்க வேண்டுமென்ற நம்பிக்கையை கட்டியெழுப்பி தமிழ் தேசிய எழுச்சியை சர்வதேசமெங்கும் புலம்பெயர் மக்கள் வெளிப்படுத்தி விடுதலைப் போரட்டத்தை விரைவு படுத்த அனைவரும் ஒன்று திரளுமாறு கேட்டு கொண்டவன் லெப்.கேணல் கௌசல்யன்.
ஆழிப்பேரலை அனர்த்தம் கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் (26.12.2004) தமிழர் தாயாக பிரதேசத்தில் அதிக உயிர் இழப்பை பேர் இழப்பை தென் தமிழீழத்தில் மட்டு. அம்பாறை மாவட்டங்கள் இழப்பை சந்தித்தது.

இந்த மக்களின் உயிர் இழப்பிற்கான மன ஆறுதலும் ஆற்றுப்படுத்தலும் மக்களை அரவணைத்து அந்த துயர நிகழ்விலிருந்து மீள் வாழ்விற்கு இட்டு செல்லும் பணியும் காயமடைந்த மக்களை காக்கும் பணியும் அவர்களை தொடர்ந்து பொருத்தமான பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து மீள் குடியேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு லெப். கேணல் கௌசல்யனிடம் தங்கி இருந்தது.
இவற்றை தமிழீழ தேசியத் தலைவரிடம் இறுதியாக சந்தித்த வேளையில் தெரியப்படுத்தியதற்கு அமைவாக இந்த மீள் கட்டுமான மீள் கட்டமைப்புக்கு தேவையான ஆலோசனை வழிகாட்டலையும் நிதிப்பலத்தையும் தமிழீழ தேசியத்தலைவரிடம் பெற்றுக்கொண்டதுடன் சென்று இதற்க்கான துரித பணியை செய்து மக்களின் துயர் துடைக்க துடியாய் துடித்துக்கொண்டு இருந்தவன்.

போராளிகளின் இல்லற வாழ்வு என்பதை தேச விடுதலையுடன் சமுக விடுதலைக்கு அடித்தளமான சிந்தனையுடன் தமிழீழ தேசியத்தலைவர் வழிநடத்தி வந்தவர்.
போராளிகள் இல்லற வாழ்வுக்குரிய வயதை எட்டும் போது அவர்களின் சுதந்திரமான முடிவுக்கு அமைய தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழுவின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெறும் அவ்வாறுதான் கௌசல்யனின் திருமண நிகழ்வும் நடந்தது தனது வாழ்வின் துணைவியை தெரிவு செய்து திருமணம் செய்து கொண்டவர்.
திருமண நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் துரோகத்திற்கு விலைபோன கருணாவின் பிளவினை அடுத்து மக்களிடத்தில் உண்மைத்துவ அரசியல் பணியினையும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தாங்கி நின்ற கௌசல்யன் தனது வாழ்கை துணைவியுடன் மகிழ்வான அன்புப் பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய கால சூழ்நிலைகள் கூட அவருக்கு அமைய வில்லை என்பது வேதனை.

யார் இந்த கௌசல்யன்………….

கொக்கட்டிச்சோலை பண்டாரியா வெளியை பிறப்பிடமாக கொண்ட தந்தை இளையதம்பி அவர்களின் மகனாக லிங்கராசா என்ற இயற்பெயர் கொண்டவன்.
தான் பிறந்த மண்ணில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தவன் கற்கின்ற கல்வி மூலம் தானும் தலைநிமிர்ந்து மனிதத்துவமாக வாழவேண்டுமென்ற ஆசைகொண்டு இருப்பான் அனால் அவன் பிறந்த மண்ணில் கண்முன்னே நடந்த அவலம் இந்த விடுதலைப் போராட்டத்திற்கான அவசியத்தை உணர்த்தி நின்றது.
மண்முனைத் துறைக்கும் மகிழடித்தீவிற்க்கும் இடைப்பட்ட வயல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு இருந்த இறால் பண்ணை இது அமெரிக்க, கொங்கொங் நாட்டு கூட்டு நிறுவனம் நடத்திவந்த இந்த இறால் பண்ணையில் வேலைசெய்து வந்த உள்ளூர் மக்கள் 23 பேரை 1987 தை 28ம் திகதி ஸ்ரீ லங்கா அரச படையினர் சுற்றி வளைத்து கைது செய்து அக்கிராம சந்தியில் வைத்து சுட்டுக்கொன்றபின் உடல்களை பழைய ரயர் போட்டு அந்த இடத்தில் எரித்தனர்.

அதன் பின்னர் முதலைக்குடா, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்து கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் சுட்டு கொன்றார்கள் படகுகளில் தப்பிச்சென்ற பொது மக்களையும் உலங்குவானுர்தியில் வந்த வான்படையினர் சுட்டுக்கொன்றனர்.
இத்தாக்குதலில் 12வயதுக்கு உட்பட்ட 7சிறுவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டபோதிலும் 133பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது.பலர் காணமல் போயிருந்தனர். மூன்று நாட்களாக அக்கிராமங்களுக்கு யாரும் செல்லமுடியாதபடி போட்டிருந்த விசேட படையினர் மிகக் கொடுரமான இனப்படுகொலையை நடத்தியிருந்தனர்.
இப்பாதிப்பின் வடுக்களை தாங்கியவர்களும் நேரடியான அவலத்தை கண்ணுற்ற இளைய தலைமுறையினர் பலர் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து தங்கள் தலைவிதியை தீர்மானிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் அவர்களுக்கு தெரியவில்லை.இவ்வாறான சூழ்நிலைதான் கெளசல்யனுக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட உணர்வை தூண்டியது.

போராட்ட களத்தில் தன்னுடைய உள்ளத்தில் உறைந்து கிடந்த அனைத்து பன்முக ஆற்றலையும் விடுதலைக்காக வெளிப்படுத்தியவன் பொறுப்பாளர்களால் கொடுக்கப்படும் அத்தனை கடமைகளையும் பொறுப்புணர்வுடன் செய்து முடிப்பவன்.
இவனது ஆற்றல் ஆளுமை செயற்திறன் ஆகியன தமிழீழ தேசியத்தலைவரின் பார்வைக்கூடகாக மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக உயர்ந்துநின்றான்.
அரசியல் பணியில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த தலைவரின் நம்பிக்கையும் பெற்றுக்கொண்ட மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் 1985இல் முதல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் (31.10.1988 அன்று தேச விரோத கும்பலினால் ஊர் சுற்றிவளைக்கப்பட்டு தேச விரோதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டு வீராச்சாவடைந்தார்) அவர்களுக்கு அடுத்தபடியாக லெப்.கேணல் கௌசல்யன்.
மண்ணிற்கே உரித்தான தமிழ் தேசிய உணர்வாளர்கள் கல்வி மான்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஆதரவையும் ஊடகவியலாளர்களின் புரிதலையும் உணர்ந்து கொண்டு தனது அரசியல் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்த வேளையில் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வாளர்களினதும் தேச விரோத கும்பலினதும் திட்டமிட்ட சதியினால் வன்னி சென்று தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்து திரும்பும் வேளையில்,
2005 மாசி 7இல் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யனும் சக அரசியல்துறை போராளிகளும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது வவுனியா இராணுவ தடைமுகாமில் போராளிகளின் பயணிப்பை உறுதிப்படுத்தி திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு மூலம் இவர்களை வெலிகந்தையில் வைத்து இவர்களை நயவஞ்சகமாக கொலை செய்ய வேண்டுமென்ற இலக்கோடு சிங்கள புலனாய்வாளர்களும் தேச விரோத கும்பலும் இணைந்து நிராயுத பணிகளாக வந்த இவர்களை கோழைத்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
மண்ணின் விடுதலைக்காக குருதியை சிந்தி லெப்.கேணல் கௌசல்யன்,மேஜேர் புகழவன்(சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜேர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2லெப்.விதிமாறன்(சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு (படுகாயமடைந்து 2005 மாசி 8இல் வீரச்சாவடைந்தார்) வாகன சாரதி எஸ்.விநாயக மூர்த்தி ஆகியோர் இந்த விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டனர்.

லெப்.கேணல் கௌசல்யனின் இழப்பிற்கு பின்னால் சமாதான பேச்சுவார்த்தை நடுநிலையாளர்களான நோர்வே குழுவினரின் மனச்சாட்சியை உலுப்பியது சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் அபிலாசைக்குரிய எந்த ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
போர்நிறுத்த உடன்பாடு என்பது சிங்கள அரசின் வெறும் கண்துடைப்பு என்பதை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தனது மௌனமான தராசில் போட்டு பார்த்து விட்டது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபிஅனான் லெப்.கேணல் கௌசல்யனின் இழப்பை கண்டித்து வெளிப்படுத்திய கருத்து உலக அரங்கில் எமது விடுதலைப்போரட்டத்தை பொட்டிட்டு காட்டியுள்ளது.

வரலாறு நமக்கு தந்த
வழிகாடி நம் தலைவன்
வழிநின்று ஓயாது
வாழும் வரை உன்னை
அர்ப்பணித்த வீரனே கௌசல்யா…
உன்னை நாம் இழந்தாலும்
இலட்சிய பயணத்தில்
உணர்வு மிக்க மக்களின்
வரலாற்று நாயகர்களில்
ஒருவராக வாழ்கின்றாய்
என்றும் உன் இலட்சிய பயணத்தில்
விடுதலை வென்றெடுக்கும் வரை ஓயோம்.

நினைவுப்பகிர்வு: தணிகைக்குயில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.