துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது


திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நடுஊற்று பகுதியில் திங்கட்கிழமை (7) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ரி56 ரக துப்பாக்கியுடன் நேற்று (8) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கிண்ணியா - சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது முகம்மது முஜீப் (30 வயது) மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றி வருபவர் எனவும், இவர் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 9 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.