விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

 


திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கிண்ணியாவில் இருந்து நேற்று (23) மாலை விறகு வெட்டுவதற்காகத் திருகோணமலை முத்துநகர் பிரதேசத்திற்குச் சென்ற நபர் இன்று (24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ரஹ்மானியா நகர், கிண்ணியா - 01 ஐ சேர்ந்த அப்துல் கபூர் (வயது-65) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிண்ணியா பிரதேசத்திலிருந்து விறகு வெட்டுவதற்காக முத்துநகர் பிரதேசத்திற்குச் செல்வதாக குடும்பத்தினருக்குத் தெரிவித்து விட்டுச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு வரை வீடு திரும்பாமையால் குடும்பத்தினர் குறித்த நபரை தேடி வந்த சந்தர்ப்பத்தில் இன்று காலை முத்துநகர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.