ஆட்டிப்படைக்கும் புதிய வைரஸ்!
கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது.
கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரோன் போன்ற பல்வேறு வகைகளில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது ஒமிக்ரோன் வைரஸ் ‘ஸ்டெல்த் ஒமிக்ரோன் ’ ஆக உருமாறி உள்ளது. உருமாறிய ஸ்டெல்த் ஒமிக்ரோன் வைரஸ் சீனாவில் வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெல்த் ஒமிக்ரோனால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் அங்கு ஊரடங்கு போடப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதேபோல் அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஒமிக்ரோன் வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஒமிக்ரோன் தொற்று கட்டுக்குள் வந்து உலகமே நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது ஸ்டெல்த் ஒமிக்ரோன் சீனாவையும், அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த ஸ்டெல்த் வைரஸ், ஒமிக்ரோைன விட ஒன்றரை மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.
இதன் உருமாற்றத்தை சோதனைகளில் கண்டறிவது மிக மிக கடினம். ஸ்டெல்த் என்ற வார்த்தைக்கும் ‘கண்டறிவது கடினம்’ என்பது தான் அர்த்தம். ஸ்டெல்த் என்பது ஒமிக்ரோன் தோன்றும் போதே உருவானதுதான். எனவே இதை சிஸ்டர் வேரியன்ட் என்று அழைக்கிறார்கள்.
இது வேகமாக பரவினாலும் பாதிப்பு மிக மிக குறைவுதான். மயக்கம், அயர்ச்சி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். இவை தவிர காய்ச்சல், இருமல், நாக்கு- தொண்டை வறட்சி, தலைவலி, தசைகளில் அயர்ச்சி, அதிக இதயத்துடிப்பு போன்ற லேசான அறிகுறிகளும் தென்படும்.
தீவிர பாதிப்பு இருந்தால் இருமல், சளி, தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்பிசம் ஆகிய அறிகுறிகள் தென்படும். தொற்று பாதிக்கப்பட்ட 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே அறிகுறிகளை உணர முடியும்.
ஒமிக்ரோன் போலவே ஸ்டெல்த் ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறப்பாக செயல்படுகிறது. வழக்கமான கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தால் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
ஸ்டெல்த் ஒமிக்ரோன் தொண்டையில் சளி பாதிப்புடன் முடிந்து விடும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் நுரையீரலை தாக்கும். தடுப்பூசி போட்டு ஒரு வருடம் கடந்தவர்கள் தொற்று நோய் உள்ளிட்ட இணை நோய்களால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தடுப்பூசி போடாதவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். இதன் வீரியம் குறைவு. ஆனால் பரவல் வேகம் அதிகம். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் அபாயம் அதிகம். எனவே தடுப்பூசிகளை டாக்டர்கள் அனுமதியுடன் மீண்டும், மீண்டும் எடுத்துக் கொள்வது முக்கியம்.
உலக சுகாதார அமைப்பு இதைத்தான் நமக்கு அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறது.
இப்போதைய சூழலில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளை நாம் திரும்பத்திரும்ப தூண்டி விடுவது முக்கியம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு 400-க்கு மேல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் அந்த சக்தி வேலை செய்யாது. 8 வருடத்திற்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு 300-க்கு மேல் இருந்தாலே எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
எனவே அவர்கள் உடலிலும் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. அவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யும். அதே நேரத்தில் தடுப்பூசி போடும் போது கொரோனா தொற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவுக்கு அதிகமான நீர் உடலில் தங்கி நுரையீரலில் சேரும். இதனால் அவர்களின் நுரையீரலில் காற்று செல்வது குறையும். அவர்களுக்கு ஸ்டெல்த் ஒமிக்ரோன் பாதித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நேரிடும்.
தொடுவதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்காது. அது காற்றின் மூலம் பரவுகிறது. காற்றோட்டமான இடங்களில் அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். நெரிசலான இடங்களில் அது வேகமாக பரவும். முக கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது மட்டும்தான் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும்.
இந்தியாவிலும் ஸ்டெல்த் ஒமிக்ரோன் பரவ வாய்ப்பு இருக்கிறது. விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் நோய் பரவலாம். கொரோனா அடுத்த அலை வருமா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. இப்போது இந்தியாவில் 50 சதவீதம் பேருக்குதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இன்னும் ஏராளமானோர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் மூலம் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கொரோனா என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை அது வெறும் சளி, இருமலோடு நின்றுவிடும். எல்லோருமே தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் இந்த பிரச்சினையை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை