சுவிஸ் செல்ல முயன்ற தம்பதியரை நாடுகடத்த உத்தரவு!


புகலிட தஞ்சம் கோரி இந்தியா வழியாக சுவிஸ் செல்ல முயன்ற இலங்கைத்தம்பதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய குறித்த தம்பதியர் மற்றொரு அரசியல் கட்சியினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால் படகு ஒன்றில் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளனர்.

தங்கள் இரு பிள்ளைகளுடன் இந்தியா வந்தடைந்த அவர்கள், புதுடில்லியிலுள்ள சுவிஸ் தூதரகத்துக்குச் சென்று விசா பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்காக exit permit பெறுவதற்காக புதுடில்லியிலுள்ள வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தை அணுகியபோது, சென்னையிலுள்ள அலுவலகத்தை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் சென்னை பொலிசாரை அணுகிய நிலையில், அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவரவே, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னையில் அவர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட, திருச்சியிலுள்ள சிறப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் , அவர்களுடைய பிள்ளைகள் இந்தியாவிலிருக்கும் அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்துடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு நான்கு நாட்கள் சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாங்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தங்களை சுவிட்சர்லாந்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகியுள்ளனர்.

அதன்படி, தம்பதியரையும் அவர்களது பிள்ளைகளையும், அவர்களது விசா காலாவதியாகும் முன் சுவிட்சர்லாந்துக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி வெளியுறவு அமைச்சகத்துக்கும், சென்னை வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்திற்கும், நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.