போரும்-வாழ்வும்..!!

 


அந்த கிபிர் விமானம் முதல் முதல் ஈழத்தின் வன்னிப்பகுதியை வட்டமடித்தது. வானம் பிளந்துவிடும் பேரொலியை ஈழவானம் கேட்டது. அது மூன்று குண்டுகளை கொட்டிவிட்டு பேனபின்னர்தான் அதன் குண்டுகள் வெடித்தது.

அது வெடித்ததிசையில் ஜென்ஸ் சைக்கிளின் பாறில் அமந்து எட்டாத பெடலை எட்டி எட்டி உழவுசெய்த எருதுபோல் மூச்சிரைக்க குண்டு வீழ்ந்த இடம்நோக்கி பறந்தேன்.
இடம்பெயர்ந்து குடியிருந்த மக்களின் மூன்று குடிசைகள் எரிந்துகொண்டிருந்தன. பச்சை மரங்கள் புகைந்துகொண்டிருந்தன. ஒரு தட்டில் குழந்தையொன்று உட்கொண்ட உணவின் மீதி இருந்தது. அதற்குள் அந்தக்குழந்தையின் குருதி நிறைந்திருந்தது. அந்த காட்ச்சியை எப்படி மறப்பது ?
மாலைச்செய்தியில் LTTE இன் தளம் தாக்கியளிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது.
அந்த கிபிர் விமானத்தை இலங்கையைச்சேர்ந்த எவரும் இயக்கவில்லை. இன்று யுத்தத்தை எதிர்கொள்ளும் நாட்டைச்சேர்ந்த இருவர் இயக்கினர்.
அவர்களுக்கு நாம் யார்மீது குண்டை வீசுகிறோம் என்ற அக்கறை இல்லை. அது அவர்களின் வெற்றிகரமான தொழில். யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை குண்டுகளின் கீழ்வாழ்ந்தோர் அறிவர்.
*
‘போரும்-வாழ்வும்’ என்ற நூல் உலக நாவல்களில் முக்கியமானது. அன்னா கரீனா வாசித்தபின்னர் எப்படியாவது படித்துவிடவேண்டும் என்று தேடியது. அதற்கு டோல்ஸ் ரோயின் படைப்பு வலிமையே காரணம்.
இது 220 ஆண்டுகளின் முன்னர் நொப்போலியனுடனான போரையும் வாழ்வையும்பற்றிப்பேசுகிறது. மூன்று பாகங்களில் 500 பாத்திரங்கள் வந்துபோகிறார்கள். முதல்பாகத்தை கடந்த ஒரு கிளமையாக படித்தபோது அது போரைவிட கடுமையாக இருந்தது.
‘’போரில் காயப்பட்டு இளவரசர் அன்ரூ யுத்தகளத்தில் உயிரற்ற உடல்களுடன் கிடக்கிறார். அவர்கையில் இருந்த ரஸ்யக்கொடி வீழவில்லை. அங்கு குதிரையில் வந்த நெப்போலியன் தன் நாட்டுக்கொடியைவிழவிடாமல் படுகாயமடைந்திருந்தவன் உயிரோடு இருப்பதை காண்கிறார். வைத்திய வண்டிக்கு கொண்டுசெல்ல கட்டளைஇடுகிறார்.
-
அன்ரூவின் மனைவி குஞ்சு இளவரசி கணவனின் தகவலின்றி முதல்குழந்தையைபெற்றெடுக்கும் காலத்தில் இருக்கிறாள். நெப்போலியனிடம் கைதியாகிய இளவரசரைப்பற்றிஎந்தத்தகவலும் இல்லை. யுத்தமுனையில் இருந்து அவரின் தந்தைக்குஒரு கடிதம் வருகிறது. ‘இளவரசர் அன்ருவின் பெயர் இறந்த பட்டியலிலும் இல்லை. காயப்பட்டோர் பட்டியலிலும் இல்லை.’
அன்ரூ நெப்போலியனால் விடுதலைசெய்யப்பட்டு வீடு வருகிறார். மனைவிக்கு பிரசவம் நடந்துகொண்டிருக்கிறது. குழந்தை பிறந்துவிடுகிறது. மனைவியை பார்க்க ஓடிச்சென்று முத்தமிட முயல்கிறார். எந்த அசைவுமில்லை. அவள் இறந்துவிட்டாள்.
ஒரு பிறப்பு எத்தனை அற்புதமானது ? ஆனால் யுத்தம் சக மனிதனை கொல்லவே தெரிவுசெய்யப்படுகிறது.
*
அண்மையில் அ. மு கட்டுரை படித்தபோது விமானத்தில் இருந்து குண்டுபோடுவதற்கு கட்டளை இட்ட தளபதியும் அக்குண்டால் பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தித்த நிகழ்வை படிக்க முடிந்தது.
1972 விட்நாம் யுத்தம் என்றாலே ‘படத்தில் வந்த சிறுமி’ பற்றி எல்லோருக்கும் தெரியும்.
அமெரிக்க விமானம் நப்பாம் குண்டுகளை வீசுகிறது.அது வெடித்ததும் 1200 டிகிறி வெப்பத்தில் அச்சிறுமி அணிந்திருந்த பருத்தி ஆடைகள் கருகிப்போய்விடுகிறது. அந்த சிறுமி வெறும் உடலோடு ஓடிவருகிறாள். அந்த சிறுமியை நிக் உட் என்பவர் படம்பிடித்துவிட்டு சிறுமியை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறார்.
எந்த நாடு குண்டை வீசியதோ அதே நாட்டைச்சேர்ந்த வைத்தியர்களால் 14 மாதங்களில் 17 முறை அறுவைச்சிகிச்சை செய்து காப்பாற்றுகிறார்கள். அவர்தான் கிம் ஃபுக். இன்று அவர் கனடாவில் வாழ்கிறார்.
1996 இல் வாஷிங்டன் இல் வியட்நாம் போர் நினைவுநாளுக்கு அவரை பேச அழைத்தார்கள். அந்த விழா முடிந்ததும் ஜோன் புலுமியே(john plummier) என்ற வயதான மனிதர் கண்களில் நீர் வழிய கிம்மை கட்டியணைக்கிறார். அவர் வெம்பிய வாயில் இருந்து « கிம், என்னை மன்னித்துவிட்டாயா ? » என்று கரைந்து அழுகிறார். அவர்தான் அந்த நான்கு நாப்பாம் குண்டுகளை வீசிய விமானத்தின் கட்டளை அதிகாரி.
கிம் கூறுகிறார் ; ‘உங்களையும், குண்டுவீசிய விமானியையும் மன்னித்துவிட்டேன்.’
ஈழத்தில் குண்டுபோட்ட கிபிர் விமானிகள் இன்று கீவ் நகரில் இருக்கலாம். அவர்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. அவர்கள் கேட்காவிட்டாலும் மன்னித்துவிடுவோம். அதைவிடச்சிறந்தது வேறென்ன உண்டு ?.
கிம் மன்னிக்காதவர்களும் இருக்கலாம். அவர்கள் பாதுகாப்பாக, பெரும் அந்தஸ்தில், பெரும் பதவிகளில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.