போராடாமல் தோற்பது நியாயமா? - மகளிர்தின சிறப்பு கட்டுரை - கோபிகை!!

 



இன்று சர்வதேச மகளிர் தினம்...பெண்களின் உரிமைக்கான அங்கீகார தினம்...இந்நாளில் பெண்களுக்கான முக்கிய பிரச்சினை தொடர்பில் இக்கட்டுரையில் பார்ப்போம். 

தற்போது  மலிந்துவிட்ட ஒரு செய்தியாக இளம் பெண்களின் தற்கொலை மரணங்கள் உள்ளன. ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை, தூக்கில் தொங்கி யுவதி மரணம், கைக்குழந்தையை கீழே கிடத்திவிட்டு இளம் குடும்ப பெண் கயிற்றில் தொங்கினார், இளம் பெண் நஞ்சருந்தி மரணம் என பலவகையான மரணச் செய்திகளை அடிக்கடி பார்க்க நேர்கின்றது. இந்த மரணங்களுக்கு என்ன காரணம்? யார் இதன் காரண கர்த்தாக்கள்? 

பெரும்பான்மையான தற்கொலை மரணங்களில் நிச்சயமாக கணவனோ, காதலனோ பின்னணியாக இருப்பதாகத் தான் தகவல்கள் வெளிவருகின்றன. 

தற்கொலைகளுக்கு மன உடைவுதான் காரணம் என நினைக்கிறேன். தாங்கமுடியாத வலி உயிரை விட்டுவிடும் அளவிற்கு யோசிக்கச் செய்கின்றதா? ஆனால் ஒரு விடயத்தை இவர்கள் சிந்திக்க மறந்துவிட்டார்கள். 

 வலியைத் தந்தவர்கள் ...வளமோடு  இருக்க ....நீங்கள் வாழ்வைத் தொலைப்பது என்ன நியாயம்?  

அண்மையின் நடந்த நானறிந்த விடயம் இது. அவர்களுக்குத் திருமணமாகி  ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் கடந்திருக்கலாம். இரண்டு பிள்ளைகள். முதல் பெண் குழந்தைக்கு ஐந்து வயதுதான். மற்றது இரண்டு வயதுக் குழந்தை. 


கணவன் வேறொரு பெண்ணுடன்  உறவில் உள்ளார் என்பதை அறிந்த மனைவி  கணவனை கண்டித்திருக்கின்றார். சண்டையிட்டிருக்கின்றார், போராடியிருக்கின்றார், நாட்கள் கடந்த போதும் கணவனின் ஆசையும் மோகமும் இரண்டாம் பெண்ணைவிட்டு மறையவில்லை….

தன் போராட்டத்தில் தோற்றுப் போனதாக நினைத்த அந்தப் பெண், கணவன் படுத்திருந்த போது, “இனியும் திருந்தாவிட்டால் இறந்து விடுவேன்” எனச்சொல்லியிருக்கிறார். 

இந்த வார்த்தைகளில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் மீதான ஆழமான அன்பும் விட்டுக்கொடுக்கமுடியாத உரிமை உணர்வும்தானே அப்படிச் சொல்லவைத்திருக்கிறது. 


அவளது வார்த்தைகளை விளையாட்டாக எண்ணியோ, அல்லது அவள் இல்லாவிட்டால் தொல்லையில்லை என எண்ணியோ….கணவன்….”சாகதென்றால் சாகவேண்டியதுதானே.” .என்று கூறிவிட்டதைக் கேட்ட அப்பெண், உடனேயே கணவனின் கண் முன்னாலேயே தூக்கில் தொங்கிவிட்டார். 


ஒரு கொடிய மரணத்தை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு, உயிர்ப்பலியை கொண்டாடும் அளவிற்கு மோகமோ…காம உணர்ச்சியோ இருக்கமுடியுமா?

இப்போது வரை இந்தக் கேள்வி  என்னைக் குடைந்துகொண்டுதான் இருக்கின்றது. பகுத்தறிவு கொண்ட மனிதன் இப்படி நடந்துகொள்வானா?


சரிந்துவிட்டது ஒரு உயிர் மட்டுமல்லவே, அவள் பெற்றெடுத்த பூஞ்சிட்டுகளின் எதிர்காலமும் தானே, மனைவி இறந்து ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே அந்தக் கணவன் தான் இரண்டாவதாக நேசித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுவிட்டான். ஒரு சிதையில் கால் பதித்து கொண்டாடப்படும் தேன்நிலவு சுகித்துவிடுமா? ஒரு உயிரைப் பலி எடுத்த இல்லறம்தான் இனித்துவிடுமா? 



ஒரு பெண் தனித்து இந்தச் சமுதாயத்தில் வாழமுடியாதென்பது உண்மைதான்..ஆனால் வாழப்போராடியிருந்தால் இரண்டு விருட்சங்களை உருவாக்கியிருக்கலாம் இறந்துபோன மனைவி. .கட்டிக் கொண்டவளுடன் கடைசிவரை அந்தக் கணவன் வாழ்ந்துவிடுவார் என்பதற்கு என்ன அத்தாட்சி? மூன்றாம் பெண் மீது ஆசை கொள்ளமாட்டாரா? 


இளம் பெண் பிள்ளைகள் சிந்தித்து முடிவெடுக்காமல் வயதுக் கோளாறினால் தாம் எடுக்கும் முடிவினால் தற்கொலை தீர்வென்று எண்ணி விடுகின்றனர். நம்பிக்கை பொய்த்துவிட்டதென்ற வலியில் தற்கொலை செய்துவிடும் இளம் குருத்துகள் உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை, உங்களுக்காக அன்பு காட்டும் நட்புகளை, நேசத்தை உருக்கி ஊற்றும் உறவுகளை, சொந்தங்களை ஏன் நினைப்பதில்லை?

போராடாமல் தோற்றுப் போவது என்ன நியாயம்? உயிரைத் துறந்து எதைச் சாதிக்கப்போகின்றீர்கள்? 

ஒரு விடயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும், தைரியமும் துணிவும் இல்லாமல் வாழமுடியாது, வீட்டிற்கு உண்மையாக இருங்கள். உங்களை மிஞ்சி எதுவும் நடப்பதில்லை. பக்குவமும் அனுபவமும் காலக்கரைதலில் வருவது தான். ஆனால் எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீரவல்ல. 


“வாழ நினைத்தால் வாழலாம்….வழியா இல்லை பூமியில்….”என்கிற வரிகள் நிதர்சனமானவை….வாழ்வோம்..வாழவைப்போம்….


கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.