ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்!!

 


தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தெரிவித்தார்.


13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.


அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். 


இத்தகைய நேரத்திலே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஒரு சமஷ்டி அரசியலமைப்பாக 


தமிழர்களுடைய வடகிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரிக்கின்ற, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம் இறமையை அங்கீகரிக்கின்ற அடிப்படையிலான ஒரு சமஸ்ரி அரசியல் அமைப்பாக, கொண்டுவரப்படுவதற்கான அழுத்தத்தை தமிழர்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.


இம்முறை மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கையில் கூட புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனை பார்க்கின்ற போது அரசாங்கம் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முனைப்பில் இருப்பதனை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே மக்கள் கவனயீனமாக இருக்கக் கூடாது. 


தற்போது கோட்டாபய அரசாங்கம் வந்த பின்னர் புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்காக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர் குழு தங்களுடைய தயாரிப்புகளை நிறைவு செய்திருக்கின்ற ஒரு இடத்திலே அது விரைவிலே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலே விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. 


இத்தகைய சூழலிலே தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டிய நேரத்திலே

துரதிஷ்டவசமாக தமிழ் தலைவர்கள் என்று சொல்லுகின்றவர்கள்,


தமிழ் தேசிய வாதத்தை போர்வையாக போர்த்தி கொண்டிருக்கின்ற தலைவர்கள் இந்தியாவினுடைய பிராந்திய நலன்களை கருத்தில் கொண்டு இந்தியாவினுடைய தேவைக்காக தமிழ் மக்களுடைய நலன்களை ஒற்றை ஆட்சிக்குள் பலியிட்டு பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கின்ற ஒரு கடிதம் ஒன்றை மோடிக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதாவது பதிமூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், என்று கோருகின்ற கடிதம். பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொண்டு அவர்கள் வழங்கிய ஒரு கடிதமாகத்தான் அந்த கடிதம் அமைந்திருக்கின்றது. 


நாங்கள் கடந்த தை மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பதிமூன்றாம் திருத்த சட்டம் மாகாணசபை தீர்வு காண தொடக்க புள்ளியும் அல்ல. தீர்வும் அல்ல என்பதனையும் புதிய அரசியலமைப்பானது ஒரு அரசியல் அமைப்பாக வருகிற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களிக்க வேண்டும் என்பதனையும், மாறாக புதிய அரசியல் அமைப்பானது தமிழ் தேசம், இறைமை, உரிமையை, அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்பாக கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும்  இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதனையும் நாங்கள் கடந்த பேரணியிலே வலியுறுத்தி இருக்கின்றோம்.


அதே போன்றதொரு பேரணியை நாங்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே வவுனியா மாவட்டத்திலே பரப்புரைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். மக்கள் மட்டத்திலே பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆறு கட்சிகளினுடைய தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவருமாக ஏழு பேர் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு இந்த பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதனுடைய அந்த சதி அதனுடைய உள்நோக்கங்களை நாங்கள் தெளிவுபடுத்துகின்ற வேலை திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.


பதிமூன்றாவது திருத்த சட்டம் இருப்பதைத்தான் நடைமுறைப்படுத்த சொல்லி கேட்டிருக்கிறோம் என்ற ஏமாற்று வார்த்தைகளை மக்கள் நம்பி அமைதியாக இருந்துவிட வேண்டாம். என்பதனையும் பதின்மூன்றை நிராகரிக்க வேண்டும், ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டும், தமிழ் தேச இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ரி வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி கேட்டு கொள்வதோடு அந்த பயணத்திலே மக்கள் எங்களோடு கரம் கோர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர் -  கிஷோரன்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.