பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கொடூரத்தை எடுத்துரைத்தார் ஆரிகா காரியப்பர்!!

 


அன்று தமிழர்கள் மீது பாய்ந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்று முஸ்லிம்கள் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒப்பாக கொடூரமாகப் பிரயோகிக்கப்படுகின்றது எனக் கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவித்தார்.


மக்களின் உயிர் வாழ்கின்ற உரிமைக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகின்ற இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்தார்.


கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் மாநகர சபையின் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் குறித்த பிரேரணையைச் சமர்ப்பித்திருந்தார்.


அங்கு உறுப்பினர் ஆரிகா காரியப்பர் மேலும் தெரிவிக்கையில்,


"தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 1979ஆம் ஆண்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டு, ஒரே நாளில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட சட்டமாக இருக்கின்றது. ஆரம்பத்தில் தமிழர்களை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டமானது பிற்பட்ட காலத்தில், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒப்பாகக் கொடூரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதைக் காண்கின்றோம்.


இந்தச் சட்டத்தை பயன்படுத்தி எமது முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் மிக முக்கிய புத்திஜீவிகள் கூட அநியாயமாகக் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 


குறிப்பாக பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத, தேசிய ரீதியில் பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னப் ஜெஸீம் போன்றோர் நீண்ட காலமாகச் சிறைப்பிடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே எவ்வித குற்றமும் இழைக்காத இன்னும் பலர் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஊடாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பாரிய ஆயுதத்தின் மூலம் இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், திறமைசாலிகள் எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக அண்மையில் இந்தச்  சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தம் வெறும் கண்துடைப்பான ஒரு விடயமாகும். குறிப்பாக தடுப்புக்காவல் 18 மாதங்கள் என்பது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகள் எல்லாம் அவ்வாறே இருக்கின்றன. 


ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்படுகின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்படுகின்ற சிலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதனைப் பல சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக்  கண்டித்திருக்கின்றது. 


இவ்வாறான நிலைமையில் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு சட்டமாகவே இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப்படுகின்றது. மக்களின் உயிவாழ்கின்ற உரிமைக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகின்ற இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதனை உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்" - என்றார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.