உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகள்


 மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், காத்தான்குடி நகர சபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.

“இதன்போது அது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. நாங்கள் அப்பகுதி மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினோம்.“அத்துடன், இது தொடர்பில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம். சட்டதிட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் என அதில் நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால் அதற்கு எந்தவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை. அவர் தனது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

“இது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண ஆளுநர், உரிய அமைச்சுகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம்.

“இதற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி அறிவீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளது என்ற அடிப்படையில், காத்தான்குடி தவிசாளருக்கு எதிராகவும் அறிவிப்பு செய்த பள்ளிவாசல்களுக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இரு இனங்களும் ஒன்றாக இணைந்து எமது உரிமைகளை, தேவைகளை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்தச் சந்தர்ப்பத்தில், இன முரண்பாடுகளை ஏற்படுத்தி, மீண்டும் பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக இதனை கருதவேண்டியுள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.