வவுனியாவில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு!!


 வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களில் காச நோயினால் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15பேர் மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.


இன்று (23) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


உலக காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. இம்முறை "காசநோயை இல்லொதொழிப்பதற்கு முதலிடுவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவோம்". எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இதன் போது மார்ச் 24ம் திகதி வவுனியா மாவட்ட காச நோய் தடுப்பு பிரிவில் விழிப்புணர்வு செயலமர்வும், அதனை தொடர்ந்து பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நடைபவனியும் முன்னெடுக்கப்படவுள்ளது.


  

காச நோயானது ஒரு பக்ரீரியாவால் இருமல் மூலம் மற்றவருக்கு தொற்றக் கூடியது. இந்நோயும், கொரோனாவும் ஒரே மாதிரியாகவே பரவுகின்றன. இதனை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஒருவருக்கு தொடர்ச்சியாக இருமல் இருப்பின் அது காசநோயாக இருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இக்காசநோயினை சளியை சோதிப்பதன் மூலமாக அறியமுடியும். வவுனியாவை பொறுத்தவரை அனைத்து அரச வைத்தியசாலையிலும் இம்முறையில் பரிசோதனை செய்வதற்கான வசதிவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதவிர்ந்து வவுனியா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் இக்காசநோயினை கண்டுபிடிக்க முடியும். உடனடியாக இதனை பரிசோதித்து அதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதன் மூலமாக இதனை மாற்ற முடியும்.

உலக சுகாதார ஸ்தாபனமானது ஒருலட்சம் மக்களில் 64 பேரிற்கு காசநோய் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. 


  வவுனியா மாவட்டத்தில் 2021ம் ஆண்டு 52 பேரும் 2020ம் ஆண்டு 47 பேரும் இணங்கானப்பட்டுள்ளதுடன் 2021ம் ஆண்டு இந்நோயினால் 08 பேரும், 2020ம் ஆண்டு 07பேரும் மரணமாகியுள்ளனர். இவ்விறப்புக்களிற்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற்றுக்கொண்டமை முக்கிய காரணமாகும்.  


இந்நோயினை பொறுத்தவரை ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுமிடத்து இவ்வாறான இறப்புக்களை தடுக்க முடியும். 2020, 2021 காலப்பகுதிகளில் இந்நோய் தாக்கத்தினை கண்டுபிடிப்பதில் கொரோனாவா அல்லது காச நோயா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது.

காசநோயை பொறுத்த வரை இலங்கையில் 2021ம் ஆண்டு 6771 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 2020ம் ஆண்டு 500 பேர் வரை காச நோயினால் மரணமடைந்துள்ளனர்.


 எங்களது முக்கிய நோக்காக 2035ம் ஆண்டு இலங்கையில் இருந்து காசநோயினை முற்றாக இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் எங்களது செயற்பாட்டினை முன்னெடுக்கின்றோம். 


அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிற்கு தொடர்ச்சியான இருமல் இருப்பின் உடனடியாக நீங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட காசசோய் தடுப்பு பிரிவிற்கோ சென்று சிகிச்சையினை பெற்று பூரணமாக குணமடைந்து வவுனியா மாவட்டத்தில் இருந்து காச நோயினை இல்லாதொழிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். என தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.