தேர் விபத்து -நடந்தது என்ன?

 


தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில், அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தின் போது சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் இவ்விழா தேரோட்டத்துடன் நடைபெறும். நள்ளிரவு தொடங்கி விடியும் வரை இவ்விழா நடைபெறும்.

அதன்படி 94ஆவது ஆண்டுக்கான திருவிழா நேற்று (ஏப்ரல் 26) காலை தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 அளவில் நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அப்பர் உற்சவர் எழுந்தருளினார். அலங்கார விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின் பகுதியில் பெரிய ஜெனரேட்டரும் இணைக்கப்பட்டிருந்தது

தேரில் சிறுவர்கள், பெரியவர்கள், பூசாரி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். நள்ளிரவிலும் உற்சாகமாகத் தேரை இழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வீடாகத் தேரை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர் செல்ல செல்ல வழிநெடுகிலும் தண்ணீர் ஊற்றப்பட்டது.

இந்த ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்தது. கடைசி வீட்டில் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டு திரும்பும் போது மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அப்பர் மடத்துக்குத் திரும்பும் போது தேர், சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கியிருக்கிறது. தேர் சாய்ந்த சமயத்தில் அதன் மேல் இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி தீப்பிடித்து எரியத் தொடங்கியது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

“கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. தேரை இழுத்தவர்கள் எல்லாம் சுருண்டு சுருண்டு விழுந்தனர். தேரில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. காலை கீழே வைக்கும் போது எர்த் அடித்தது. மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அருகில் சென்று பார்த்தால் எல்லோரும் சுருண்டு விழுந்து கிடந்தனர். ஆர்வமாகத் தேருடன் வந்த சின்ன பசங்கள் எல்லாம் விழுந்து கிடந்தனர். பதற்றத்தில் எங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இரண்டு நிமிடத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. கண் முன்னே எல்லாம் துடி துடித்து விழுந்தனர். ஜெனரேட்டர் அருகே அமர்ந்திருந்தவர் தீயில் கருகிவிட்டார்” என்கின்றனர். இந்த விபத்துக்குச் சாலையின் உயரம் தான் காரணம் எனவும் களிமேடு பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டனர். அதுபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்து கதறுவது பார்போரின் நெஞ்சை உருக வைக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஆண்டு தோறும் நடைபெறும் சப்பரத் திருவிழா நேற்று நடைபெற்றது. போலீசாரும் பாதுகாப்புப் பணியிலிருந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தப்படும். இதன் முடிவில் முழு விவரங்கள் தெரியவரும். குறைந்த மின் அழுத்தப் பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. சாலை ஓரம் சென்ற உயர் மின்னழுத்த பாதை மூலம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அதுபோன்று சட்டப்பேரவையில் தஞ்சையில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பேசுகையில், “எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதால் தேர் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்திருப்பது நெஞ்சை உலுக்குகிறது. அதிகாலை 3.10 மணியளவில் தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் தேரோட்டம் முடிந்து திரும்புகையில்,தேர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேகன், பிரபாஸ், ராகவன்,அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகிய 11 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உரியச் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இன்று தஞ்சை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன்” என்று கூறி இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.


சட்டப்பேரவையில் விளக்கமளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்றுகூடி நடத்தியுள்ளனர். அரசுக்கு தெரியப்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில் 11.30 மணிக்குச் சென்னையிலிருந்து தஞ்சை செல்வதற்காக மதுரை பயணிகள் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.