பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

 


பெண் ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை- மானாமதுரை, திருவண்ணாமலை - செய்யாறு, விருதுநகர்- திருச்சுழி, திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் - கடலாடி, தருமபுரி - அரூர், கிருஷ்ணகிரி - தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் - குன்னம், கோயம்புத்தூர் - வால்பாறை ஆகிய இடங்களில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் ரூ.6.80 கோடி செலவில் தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ வாங்க தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். சுமார் 500 பேருக்கு இந்த மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து காரணமாக மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதுபோன்று திருமண நலத்திட்ட உதவித் தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.