19 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களை சிறீலங்கா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடந்த மாதம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

சிறிலங்கா கடற்படை

அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 19 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறீலங்கா கடற்படையினர் கைது செய்தனர். மேலும் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

யாழ்ப்பாணம் சிறை

இந்த நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் சிறீலங்கா ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 12ம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

காவல் நீடிப்பு

இந்த நிலையில் 19 மீனவர்களுக்கும் கடந்த 12ம் திகதி சிறைக்காவல் முடிந்தது. ஆனால் சிறீலங்காவில் அன்றைய தினம் விடுமுறை என்பதால் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல் நீட்டிப்பு திகதி பெறுவதற்காக அதிகாரிகள் மட்டும் நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.

19 பேருக்கு

இதையடுத்து சிறீலங்கா ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேருக்கு இன்று (18ம் திகதி) வரை சிறைக்காவலை நீட்டிப்பு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

விடுதலை

இதையடுத்து சிறைக் காவல் முடிந்து 19 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுதொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தியதில் மீனவர்கள் தாங்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததை ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஓரிரு நாளில்

இதனைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.