உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும்..

 


தென்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த காலப்பகுதி. ஓய்வு அறையில் இருந்தேன்.  சக உத்தியோகத்தர்கள் நால்வர் பத்திரிகைகளை புரட்டியபடி நாட்டு, அரசியல் நிலைகளை பேசிக்கொண்டு இருந்தனர்.


குருந்தூர் மலையின் அகழ்வு பற்றிய செய்திகள். பத்திரிகைகள் அனைத்துமே இனவாதத்தை தூபமிட்டு கொண்டிருந்தது. அவர்களது பேச்சும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இனவாதமாக பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவர் ஒரு படி மேல் சென்று " இந்த தமிழ் நாய்கள் இந்தியாவில இருந்து வந்திட்டு எங்கட நாட்டில திமிர் காட்டுதுகள். அதுவும் முல்லைத்தீவில எங்கட ஆமதுறுவின்ர (b)பொடியை எரிக்கவிடாமல் போனவருசம் பிரச்சினை பண்ணினவங்கள். நான் ஒன்றே ஒன்று தான் நினைக்கிறனான், முள்ளிவாய்க்காலில குண்டு போட்டு எல்லாரையும் கொன்று இருக்க வேணும் என்று " சத்தமாகவே கூறினார். அந்த கருத்தை ஏனைய மூவரும் ஆமோதிப்பதாகவே அமைதியாகவே இருந்தனர்.


ஒரு தமிழ் சக உத்தியோகத்தர் இருக்கிறார் என்ற குறைந்தபட்ச கண்ணியம் கூட இருந்திருக்கவில்லை. அகங்காரம், அதிகாரம், ஏளனம் மிதமிஞ்சிய தொனிகள் அவை.


இப்போது அவர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை, எரிபொருள், எரிவாயு, மின்சாரம். இந்த மூன்றும் எந்த விலையிலேனும் தடையின்றி கிடைக்குமாயின் இங்கு எந்த போராட்டத்தையும் முன்நின்று நடத்த எவரும் இருந்திருக்கமாட்டார்கள். இந்த அரசாங்கத்தை அவர்களே உருவாக்கினார்கள். எந்த அரசும் சர்வாதிகரமாக உருவாக்கபடவில்லை. அரசு அவர்களுடைய சௌகரிய வலயத்திற்குள் (comfort zone) தலையீடு செய்ததன் பதில் விளைவே இந்த போராட்டாங்கள். 


போராட்டத்திற்கு ஆள் போதாது என்றே ஒன்றிணைவோம் என்கிறார்களே தவிர, தமிழனுக்கு  நாட்டில் அநியாயம் இழைக்கப்பட்டது, நீதி மறுக்கப்பட்டது என்று யாருமே கூறமாட்டார்கள். ஒரு சிலரில் புரிதல்கள், மாற்றங்கள் ஏற்படுவதாக சமூக ஊடகப் பதிவுகள் கூறினாலும் எங்கள் மீதான அவர்கள் பார்வை மாறிவிட்டது என நான் ஒரு போதும் எண்ணமாட்டேன். 


இப்போதைய அறைகூவலகள் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கவே. விலைவாசி, ஏனைய பொருளாதார பிரச்சினைகள் அனைவருக்குமே என்ற போதிலும் நடப்பவற்றை பார்த்து கொண்டிருக்கவே செய்வேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும்..


- வைத்தியர் Uthayaseelan Katkandu

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.