சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்!

 


அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார்.
எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். 

புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது. உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், 
எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது. இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். 

போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. 

இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் 
தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். 


தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. 
பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். 


இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. 1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். 

எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு. இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த 
பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும்.


1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், 
வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார். இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, 


மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் 
இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது. பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 


1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, 
நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி. யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். 

அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். 


அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது. முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி 
தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன். 
இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். 

அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. 18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று 
வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது.


 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற 
வைக்கிறது. இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். 


இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் 
வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம். அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக
செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.