குமுதினிப் படகுப் படுகொலை - 15.05.1985


குமுதினிப் படகானது நெடுந்தீவின் மாவிலித்துறையிலிருந்து குறிகட்டுவானுக்கும், குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவின் மாவிலித்துறைக்குமிடையில் பயணிகள் மற்றும் பண்டங்களை ஏற்றியிறக்கும் ஒரு படகாகும். 


தினமும் காலை 7.00மணியளவில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானை நோக்கி பயணித்து பின்னர் மீண்டும் காலை 10.00மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவை நோக்கிச் சென்று, பின்னர் மீண்டும் மதியம் 02.00மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானை நோக்கிச் சென்று பின்னர மாலை 4.00மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்குச் செல்வது தான் குமுதினியின் வழமையான பயணமாகும்.


தினமும் பயணிகளை சுமந்து வந்து கொண்டிருந்த குமுதினி, வரலாற்றில் ஒரு நாள் வலிகளைச் சுமந்து வந்தாள்.


15.05.1985அன்றும் காலை 7.00மணிக்கு நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து குறிகட்டுவானை நோக்கிப் புறப்பட்டது குமுதினிப் படகு. படகு புறப்பட்டு 30 நிமிடங்களின் பின் படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த போது, கண்ணாடியிழைப் படகில் வந்த 06 பேரினால் குமுதினிப்படகு வழிமறிக்கப்பட்டது. அவர்களில் 03 பேர் சிறிலங்கா கடற்படையின் சீருடையை அணிந்திருந்தனர். ஏனையோர் சாதாரண உடையில் வந்திருந்தனர். அவர்களில் இருவர் துப்பாக்கிகளையும், ஏனையோர் கத்திகள், கோடாரிகள் மற்றும் கூரான ஆயுதங்களை வைத்திருந்தனர்.


குமுதினிப் படகானது இரு அறைகளைக் கொண்டிருந்தது. அவர்கள் 06 பேரும் படகில் ஏறி, பயணிகளை சோதனையிட வேண்டுமெனவும் அதனால் படகினுள் இருந்த அனைவரையும் முன்அறைக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.


பின்னர் முன்னறையிலிருந்த மக்களை ஒவ்வொருவராக பின்னறைக்கு அழைத்து வெட்டி, படகின் ஆடுதண்டுப் பகுதியினுள் போட்டுள்ளார். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்க ளுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.


அவ்வாறு ஒருவர் பின்னறையை நோக்கிச்சென்ற போது உள்ளே என்ன நடக்கின்றது என்ற விடயத்தைச் சுதாகரித்துக் கொண்டு தப்பிப்பதற்காக கடலினுள் பாய்ந்துள்ளார். ஆனால் அவர் மீது உடனடியாகவே துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டு, அடுத்தநாள் காலை அவரது உயிரற்ற உடல் அல்லைப்பிட்டியில் கரையொதுங்கியது.


சுபாஜினி விஸ்வலிங்கம் என்ற 07 மாதக்குழந்தை உட்பட தெய்வானை என்கின்ற 70 வயது மூதாட்டி வரை அவர்களின் கொடுரத்திற்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தனர்.


அனைவரையும் வெட்டிப்போட்டபின் அவர்கள் 06 பேரும் தாங்கள் வந்த படகில் ஏறி புறப்பட்டனர். பின்னர் காற்றின் காரணமாக குமுதினிப் படகானது நீரோட்டத்தினால் இழுத்துச்செல்லப்பட்டு புங்குடுதீவுப் பக்கமாக கரையொதுங்கியது. அதன்பின்னரே அங்கிருந்தவர்கள் படகினை மீட்டு அங்கிருந்த காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.


இச்சம்பவத்தில் மொத்தமாக 36 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து உயிர்தப்பிய விடயத்தை அறிந்த இராணுவத்தினர் அவர்களைப் பிடிப்பதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்று தேடுதல்களை நடாத்தியிருந்தார்கள். இதனால் காயமடைந்த பலர் இராணுவத்திற்கு அஞ்சி மறைந்து வாழ வேண்டிய நிலையேற்பட்டது.


இச்சம்பவத்தில் ஈடுபட்ட சில கடற்படையினரை நயினாதீவு விகாரை இறங்குதுறை முகாம் பகுதியில் முன்னர் கண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.


இச்சம்பவத்தில் உயிர்தப்பியவர்களின் சாட்சியங்களை பதிவு செய்த ”சர்வதேச மன்னிப்புச் சபை”, அவற்றை சிறிலங்கா அரசிற்கு வழங்கியிருந்தார்கள். ஆனால் அது தொடர்பில் எந்த விசாரணையுமே நடாத்தியிருக்கவில்லை.


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.