தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் நகர்வும் அரசியல் நகர்வும்!!

 


ஆயுதமேந்திய விடுதலை போராட்டம் என்பது போர் ,அரசியல் என்ற இரு தளங்களை கொண்டது. இந்த இரு தளங்களும் பின்னிப் பிணைந்தவை. இங்கு போர்க்களத்தின் பெறுபேறுகளே அரசியல் களத்தில் தீர்வைத்  தீர்மானிக்கும். இதற்கு சிறந்த உதாரணமாய் அமைந்த ஒரு சமரை பற்றிய பதிவுதான் இது. 


இந்த பதிவை எழுதியதற்கு மேலும் இரு காரணங்கள் உண்டு. 


தமிழ் சமூகம் போரியலின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளாதவரை , அவர்களால் விடுதலைப் புலிகளின் நகர்வுகளையும், நகர்விற்குப் பின்னேயிருக்கும் காரணத்தையும் கடைசிவரை புரிந்து கொள்ளமுடியாது. அதனை decode செய்யமுடியாது.  


அதனால் தமிழ் சமூகத்தின்  பார்வையில் ‘ ஏதோ ஒரு போர் நடந்தது’ என்ற ஒற்றை நினைவோடு, வரலாற்றிலிருந்து மறைந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. 


இருபதாம் நூற்றாண்டின் வீரஞ்செறிந்த , நெறி சார்ந்த போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை முடிந்தவரை போரியல்ரீதீயான பார்வையுடன் அடுத்த தலைமுறைக்கு கடத்துதலும் , போரியல் பார்வையில் அரசியலை அணுகும் முறைக்கு தமிழ் சமூகத்தை பழக்கப்படுத்துதலுமே அந்த இரு காரணங்கள்.


இனி அந்த சிறந்த உதாரணமாய் அமைந்த சமரையும், அதன் பின்னே இருந்த போரியல் காரணங்களையும் , அதனுடைய அரசியல் விளைவையும் கீழே தருகிறோம்.


• அந்த சமரின் பெயர் #தீச்சுவாலை முறியடிப்புச் சமர்


இது 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 - 27  வரை நடந்தது.இந்த சமர் நடைபெறுவதற்கு முன் இருந்த கள நிலவரத்தை சொல்லியாக வேண்டும். 


2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஆனையிறவுத் தளம் ( Elephant Pass Military Complex - EPMC) புலிகளின் கையில் வீழ்ந்தது. 


வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் வந்து பார்வையிட்டு ‘வீழ்த்தப்படமுடியாத (Impregnable) இராணுவ தளம் இது ‘ என உறுதிபடுத்தியிருந்தார்கள்.


அதன் பின்னர், உலகப் போரியல் வரலாற்றிலேயே ஒரு Non State Military Force இனால் செய்யப்பட்ட பெரும் தரையிறக்கமான குடாரப்பு தரையிறக்கத்தினை விடுதலை புலிகள் நிகழ்த்தி , ‘வீழ்த்தமுடியாது’ என கூறப்பட்ட ஆனையிறவுத் தளத்தை கைப்பற்றியது எல்லாம் வரலாறு.


• ஆனையிறவுத் தளத்தின் போரியல்ரீதியான முக்கியத்துவம்,


யாழ்குடா நாட்டை இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு யாழ்குடாவின் கழுத்துப்பகுதியான ஆனையிறவுத் தளம் இன்றியமையாதது. 


அது ஒரு strategically important military base. யாழ்குடா மீதான புலிகளின் முற்றுகை அகற்றப்படவேண்டுமாயின் ஆனையிறவு தளத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற போரியல் நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு.


இதற்கு மத்தியில் 2000 ஆண்டு டிசம்பர் 24ம் திகதியிலிருந்து  ‘சமாதானத்திற்கான சூழலை உருவாக்கும்’ முயற்சியாக ஒருதலைப்பட்சமான ஒரு மாத போர்நிறுத்தத்தை    (month-long unilateral ceasefire)  புலிகள் அறிவித்தனர்.அவ்வாறு ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்தனர். இது ஏப்ரல் 24 ம் திகதிவரை நீடித்தது. சரியாக நான்கு மாதங்கள்.


• இதற்கும் ஒரு பின்னணி உண்டு


சமாதானத்திற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புகளை புலிகளுடன் அப்போதுதான் நோர்வே ஆரம்பித்திருந்தது.


நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக , புலிகளை போர்நிறுத்ததை அறிவிக்க சொல்லும் திட்டம் நோர்வேயினூடாக வந்திருக்கும் சாத்தியங்கள் அதிகம். 


அதேநேரம் புலிகளும்  அவர்கள் போரியல் ரீதியில் வலுவான நிலையில் இருக்கும்போது , அதை பேரம் பேசும் சக்தியாக பயன்படுத்தி ,உலக ஒழுங்கின் அங்கீகாரத்துடன் அரசியல் தீர்வாக மாற்றும் நகர்வாக,  இந்த போர்நிறுத்தத்தை பயன்படுத்த நினைத்தார்கள். 


#உண்மையிலேயே இந்த போர்நிறுத்தம் போரியல் ரீதியில் புலிகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். 


ஆனால் அரசியல் தீர்வுக்கான உலக ஒழுங்கின் அங்கீகாரத்திற்காக புலிகள் இந்த நகர்வை எடுக்கவேண்டியிருந்தது.


சரியாக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி இலங்கை இராணுவம் ஆனையிறவுத் தளத்தை கைப்பற்றும் முயற்சியாக புலிகளின் முன்னரங்கு பகுதிகளின் மீது அக்னி கீல ( தீச்சுவாலை) எனும் இராணுவ நடவடிக்கையை (operation) ஆரம்பித்தது.


• இனி இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பான போரியல் ரீதியிலான அலசல். 


இந்த சமர் நடந்த நிலப்பகுதி குறுகலான முன்னர் குறிப்பிட்ட கழுத்துபகுதியில். 


இந்த இராணுவ நடவடிக்கையில் இலங்கை தனது போர்த் திறன் அதிகமுள்ள  52,53,55  ஆவது டிவிசன் படையணிகளை ( Division) ,நான்கு மாத போர்நிறுத்தத்தில் கிடைத்த  அவகாசத்தில் சிறப்பு பயிற்சி, தயார்படுத்தல்களுடன் களமிறக்கியிருந்தது. அத்துடன் அதனது சகல இராணுவ வளங்களையும் ஒன்று குவித்திருந்தது.


புலிகளின் போர்நிறுத்தம் போரியல்ரீதியாக அவர்களுக்கு ஏன் பாதிப்பை ஏற்படுத்தும் ?


இது இலங்கை இராணுவத்திற்கு அதனது இராணுவ வளங்களை குவிக்கும் வாய்ப்பினை தந்தது( heavy concentration) . 


புதிய ஆயுத வளங்களை (lethal weapon systems ) கொள்வனவு செய்வதற்கான, படையணிகளை தயார்படுத்துவதற்கான கால அவகாசத்தை தந்தது.


• போர்நிறுத்தம் இல்லாவிடில் என்ன நடந்திருக்கும்? 


புலிகள்,  ஆனையிறவை கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் வள குவிப்பை தடுக்க மற்றைய strategic position மீது offensive தாக்குதல்களை தொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள். 


இது இலங்கை இராணுவத்திற்கு அந்த strategic position  களில் படையணிகளை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் (distracting force deployments). 


இது எதிரிகளை பரவலாக கால்பரப்ப வைத்து அவர்களது நிலையை thin ஆகவே வைத்திருக்க வேண்டிய  நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்  போரியல் உத்தி. 


அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு கால அவகாசமும் கிடைத்திருக்க போவதில்லை.


இந்த நான்கு மாதங்களில் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து ஒரு தாக்குதலும்(counter-offensive operations) நடத்தப்படவில்லை.


அவர்கள் தற்காப்பு போர்முறையையே (self-restrained defensive tactics) கடைபிடித்தார்கள்.  


ஆனால் இராணுவம் வழமைபோல தாக்குதலை தொடுத்து கொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களில் விடுதலை புலிகளில் 160 பேர் உயிரிழந்தும் 400 பேர் காயமடைந்தும் இருந்தனர்.


#இத்தகைய போரியல்ரீதியான சாதக நிலை இலங்கைக்கு இந்த நான்கு மாத போர்நிறுத்த காலத்தில் கிடைத்தது.  அதனால்தான் இந்த போர்நிறுத்த திட்டத்தை நோர்வேயினூடாக உலக ஒழுங்கு   ‘ நல்லெண்ணத்தை உருவாக்குதல் (creating a congenial atmosphere conducive for talks) ‘ என்ற போர்வையில் புலிகளிடம் கொண்டு சேர்ப்பித்து இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றோம்.


ஏப்ரல் 24ம் திகதி , சுமார் 15000  இலங்கை இராணுவத்தினர் ,  இதுவரை நடத்திராத அளவிற்கான சூட்டு ஆதரவுடன் (supported by heavy artillery, multi-barrel rocket fire and aerial and naval bombardment) அந்த குறுகலான கழுத்துபகுதியினுள் முன்னேற தொடங்கினர். 


கிளாலி , எழுதுமட்டுவாள், நாகர்கோவில் முனைகளில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கியே தாக்குதல் தொடங்கியது.


மூன்று நாட்களுக்கு பின்னர் 400 ற்கும் மேற்பட்ட இலங்கை படையினர் உயிரிழந்து, 2000 ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து தங்களது தீச்சுவாலை நடவடிக்கையை கைவிட்டு பின்வாங்கினர்.


புலிகளின் இந்த வெற்றிகரமான தீச்சுவாலை முறியடிப்பு சமரின் பின்னர், உலக ஒழுங்கு, புலிகள் இலங்கை இராணுவத்துடன் படைவலு சமநிலை அடைந்ததை உணர்ந்துகொண்டது.


காரணம் போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் இரண்டுதான்.


*. படைகளின் எண்ணிக்கை ( number of troops)

* ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( weapons technology ,quantities and fire power)


இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்களின் சதவீதம் 72%. இலங்கை தமிழர்கள் 12%.  மக்கள் சனத்தொகைக்கு ஏற்பவே  MILITARY PARTICIPATION RATIO ( MPR) இருக்கும். ஆக எந்தவொரு கட்டத்திலும் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை புலிகளை விட பல மடங்கு அதிகமானதாகவே இருக்கும். 


இலங்கை அரசு உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு state power. விடுதலை புலிகள் non state military force. 


ஒரு State power இனால் கொள்வனவு செய்யக்கூடிய கனரக ஆயுதங்களை (tanks, artillery , helicopters, fighter planes) ஒரு  non state actor இனால் பெற்றுகொள்ள முடியாது.


அதனால் பௌதீக போரியல் காரணிகளினூடாக அணுகினால் ஒரு non state actor இனால் ஒரு state power உடன் படைவலு சமநிலையை அடையவே முடியாது. ஆனால் இலங்கையில் விடுதலை புலிகள் படைவலு சமநிலையை அடைந்தார்கள்.


• இலங்கையின் படைவலு சமநிலை பற்றிய சமன்பாடுகளை தராகி சிவராம் அவரது கட்டுரையில் விவரித்திருப்பார். அதை அப்படியே கீழே தருகிறோம்.


“இரு நாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலை என்பது அவற்றின் பீரங்கிகள், படையணிகள் போன்றவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிட முடியாது. அவை எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் படைவலுச் சமநிலையை ஆராய்வதற்கு முக்கிய அடிப்படையாகிறது.


வடக்குத் தெற்காக முகமாலை, ஓமந்தை ஆகியவற்றுக்கிடையிலும் கிழக்கு மேற்காக முல்லைத்தீவு, மன்னார் ஆகியவற்றின் கரையோரங்களுக்கிடையிலும் அமைந்துள்ள பெரும் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. 


இதைச்சுற்றி இதன் வடபாகத்தில்இலங்கை இராணுவத்தின் 51, 52, 54 ஆகிய டிவிசன்களும் 55இன் ஒரு பகுதியும் இதன் தென்பாகத்தில் மன்னாரிலிருந்து மணலாறுவரை 21, 56 மற்றும் 22 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன. 


இவற்றோடு இந்த டிவிசன்களுக்குரிய ஆதரவணிகளாக பீரங்கி, கவசவாகன மற்றும் வழங்கல் போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இவற்­றோடு 53 டிவிசனும் வடக்கை நோக்கியதாகவே உள்ளது.கிழக்கில் மணலாறுக்குத் தெற்காக திருமலையில் 22  வது டிவிசனின் ஒருபகுதியும் மட்டக்களப்பு வடக்கு அதன் பின்புலமான மின்னேரியா ஆகிய பகுதிகளில் 23 வது டிவிசனும் அண்மைக்காலத்தில் 55 வது டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன.


இதைப் பார்க்கும்போது உங்களுக்கு விளங்குவது என்ன?அதாவது, வடக்கில் புலிகள் கட்டுப்படுத்தும் பகுதியை நோக்கி ஸ்ரீலங்கா அரசு தனது ஒன்பது களமிறக்கக் கூடிய டிவிசன்களில் ஏழு டிவிசன்களை ஒழுங்குபடுத்தியுள்ளது என்ற உண்மை அடிப்படைக் கணக்குத் தெரிந்த யாருக்கும் இலகுவாகப் புரியும். இதன் காரணம் என்ன? 


2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கில் தன்னிடமிருந்த படைவலுவின் சாரத்தைத் ஒன்றுதிரட்டி முகமாலையிலிருந்து பளையை நோக்கி ஸ்ரீலங்கா இராணுவம் தீச்சுவாலை நடவடிக்கையை மேற்கொண்டது. 


இதை முறியடித்த அதேவேளை வடக்கின் வேறு எந்த முனையிலிருந்தும் ஶ்ரீலங்கா படையினர் சமகாலத்தில் வேறு தாக்குதலை தொடுக்கமுடியாதபடி தடுக்குமளவிற்கு புலிகளின் படைபலம் காணப்பட்டது. வடக்கில் இருதரப்பிற்குமிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டுவிட்டதையே இது காட்டிற்று. 


அதாவது ஸ்ரீலங்காப் படைகளின் ஏழரை டிவிசன்களுக்கு (அந்நேரத்தில் 55 வது  டிவிசன் முழுமையாக வடக்கிலேயே இருந்தது) சமனான படைவலு புலிகளிடம் காணப்பட்டதாலேயே மேற்படி நிலை தோன்றிற்று. 


இன்னொரு வகையில் சொல்லப்போனால் ஸ்ரீலங்காப் படைகளின் 83 சதவீத வலுவிற்குச் சமனான பலம் வன்னியில் புலிகளிடம் உள்ளது என்பதையே தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வி மிகத் தெளிவாகக் காட்டிற்று. இதை இந்திய, பிரித்தானிய மற்றும் அமெரிக்க போரியல் அறிஞர்கள் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டனர்.


இலங்கையில் இவ்வாறாகத் தோன்றிய படைவலுச் சமநிலை புலிகளின் பக்கம் சரியப்போகிறது என்பது கட்டுநாயக்க வான்படைத்தளத்திற்கு விழுந்த அடியோடு ஸ்ரீலங்கா அரசின் பின்னின்ற நாடுகளுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. 


இந்தப் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக தளம்பவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த நாடுகளுக்கும் 2001 ஏப்ரலுக்குப் பின்னர் ஏற்பட்டது. 


இலங்கையின் படைவலுச் சமநிலை புலிகளுக்குச் சார்பாக சரிந்தால் இத்தீவின் இராணுவ மேலாண்மை அவர்களின் கைக்குப் போய்விடும் எனவும் அப்படிப்போனால் இங்கு தாம் எண்ணியதை செய்யமுடியாதளவிற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்றுணிவு அற்றுப்போகும் எனவும் அந்நாடுகள் எண்ணின.


அதுமட்டுமன்றி, இப்படைவலுச் சமநிலையில் புலிகளின் தரப்பு இராணுவ வளங்களில் சிலவற்றை தம்மால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அந்நாடுகள் உணர்ந்தன. 


புலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளன, எத்தனை  டிவிசன்கள் உள்ளன, சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்படுவது இலகுவாகும். 


ஆனால், புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது. 


உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால், ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. ஆகவே, இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இன்று நிலவும் படைவலுச் சமநிலையில் கரும்புலிகளும் புலிகளின் கொழும்பைத் தாக்கும் வலுவும் அளவிடமுடியாத அம்சங்களாக இருப்பதும் வெளிநாடுகளுக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. இதனாலேயே புலிகளை பேச்சுவார்த்தை என்ற கூட்டுக்குள் நிரந்தரமாக மடக்கிவைத்திருக்க அவை முயற்சி எடுக்கின்றன. 


ஆக இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரோடு இலங்கையில் படைவலு சமநிலை ஏற்பட்டது. அதன் பின் மூன்று மாதங்களுக்கு பின்னர் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதலோடு படைவலு சமநிலை புலிகள் பக்கம் சாய தொடங்கியது. 


இந்த படைவலு சமநிலையை இலங்கை இராணுவம் பக்கம் சாய வைப்பதற்கான கால அவகாசத்தை எடுத்துகொள்ளும் பொருட்டு உலக ஒழுங்கால் வரையப்பட்ட திட்டம்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்.


#நன்றாக கவனித்தீர்களேயானால் மேலே சொன்ன நான்கு மாத போர்நிறுத்தமும் இலங்கை இராணுவத்திற்கு போரியல் சாதகநிலை ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டதுதான்.

பின்னர் நான்கு வருடங்கள் நீடித்த போர்நிறுத்த ஒப்பந்தமும் அதே நோக்கத்தை கொண்டதுதான்.


#வெறும் ஒற்றை சமர்தான். ஆனால் அந்த ஒற்றை சமரின் பின்னே எவ்வளவு போரியல், இராஜதந்திர நகர்வுகள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .


#போர்க் களத்தின் வெற்றி அரசியல் களத்தில் தீர்வாக மாற்றப்படவேண்டியது கட்டாயம். அதற்கு பேச்சுவார்த்தைகள் அவசியம். ஆனால் தமிழ்ச் சமூகம்  ‘ எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் அரசியல் தீர்வை நோக்கியது ‘ என்று நினைப்பதுதான் இங்கு பிரச்சினை. இந்த பேதமைக்கு காரணம் போரியல் ரீதியான பார்வை எம்மிடம் அறவே இல்லாமல் இருப்பதுதான். ஆகவே எமது விடுதலைப்போராட்டத்தில் நடைபெற்ற சமர்கள் ஒவ்வொன்றையும், அதில் பங்குபற்றியவர்களின் உதவியுடன்  தனித்தனியாக ஆய்வுக்குட்படுத்தி , வரலாறுகளாக பதிக்க வேண்டும் . இதனை எமது இளைய சந்ததியினருக்கு சரித்திர ஆவணமாக வழங்க வேண்டும் . இதனூடாக அவர் இனிவருங்காலங்களில் தமக்கான practical theory களை உருவாக்கி , தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பார்கள். "விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது".

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.