டைனோ என் தோழன்! (2)

 


முன்கதை: தந்தை துணையுடன், வீட்டில் பல மிருகம், பறவைகளை பராமரித்து வந்தான் சந்திரஜெயன். அவன் அம்மாவுக்கு இது பிடிக்காததால் விமர்சித்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வந்து விளக்கம் அளித்தார். இனி -


''எங்க வீட்டுல இருக்குற கொடுமை போதாதுன்னு பக்கத்து வீட்டு கொடுமையும் சேர்ந்துடுச்சா... இனி, ரெண்டு பேரும் சேர்ந்து, கும்மி அடிப்பீங்க; நான் கண்ணையும், காதையும் பொத்திக்கிறேன்...'' என்றார் அம்மா.
''புலம்பாதீங்க ஆன்டி... ரொம்ப பேசுனீங்கன்னா கிள்ளி வெச்சுடுவேன்...''
''நீ கிள்ளு... உன் மண்டையில குட்டுறேன்...''
''அட... சண்டைய நிறுத்துங்க...'' என்றான் சந்திரஜெயன்.
புன்னகைத்தபடி, தோளில் போட்டிருந்த, ஜோல்னா பையை தரையில் வைத்தாள் தீவிதா; அவள், 7ம் வகுப்பு படிக்கிறாள். வயலின் வாசிப்பதில்
கெட்டிக்காரி. இருவரும், தவழும் காலத்தில் இருந்தே பழக்கம்; எப்போதும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பர்.
''என்ன கொண்டு வந்துருக்க...'' என்றான் சந்திரஜெயன்.
''பிராணிகளுக்கு, உணவு எடுத்து வந்துருக்கேன்...''
வாழைப்பழங்களை, சின்சானுக்கு நீட்டினாள். சாப்பிட்டதும் தீவிதாவுடன் நடனமாடியது. வாழை இலையில், புளியோதரை மற்றும் மசால் வடைகளை வைத்து, மொட்டை மாடிக்கு எடுத்து சென்றான் சந்திரஜெயன்.
உணவை ஏந்தியபடி காகங்களை அழைத்தான்.
அச்சமயம், வானம் வெறிச்சோடி இருந்தது.
சிறிது நேரத்திற்குள், காகங்கள் கூடி இரையை சாப்பிட்டன.
துாரத்தில் இருந்து பார்த்தபோது, சந்திரஜெயன், காகங்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
மறுநாள் -
வழக்கம் போல் எழுந்தான் சந்திரஜெயன்; பல் துலக்கி, யோகா பயிற்சி செய்த பின் குளித்தான்; காலை உணவு முடித்து, தோட்டத்தில் மிருகங்களை கொஞ்சி, இரை கொடுத்தான்.
அப்போது தோட்டத்துக்குள் நுழைந்தான் வேலைக்காரன் செந்தில். அவனிடம், ''சின்சானுக்கு பல் துலக்கி, குளிக்க வை; குளிச்சதும், நான் எடுத்து வந்துருக்குற துணிய போட்டு விடு...'' என்றான் ஜெயன்.
வாயை அகட்டி காட்டியது சின்சான்; பற்களை துலக்க ஆரம்பித்தான்; சிறிது தண்ணீரை குடித்து, வாயை கொப்பளிப்பது போல் பயிற்சி செய்து காட்டினான் செந்தில்.
கொப்பளித்து, 'பொள்ச்...' என்று துப்பியது சின்சான்.
குழாயில் சின்சானை குளிக்க வைத்தான் செந்தில்.
தண்ணீரில் ஆட்டம் போட்டது.
குளித்து முடித்த சின்சானுக்கு உடைபோட்டதும், ''பார்க்க... மனுஷன் போல இருக்க; அவங்க செய்யற எல்லா சேட்டையும் செய்யற; வாயை திறந்து பேச மட்டும் தான் தெரியல உனக்கு...'' என்றான் செந்தில்.
'என்னையும் குளிக்க வையேன்'
சமிக்ஞையால் செந்திலின் கால்களை உராய்ந்தது கழுதை.
அணில், அவன் மேலேறி விளையாடியது.
''என்ன... எல்லாரும் குளிக்கணுமா... தண்ணிக்கு எங்க போறது; சின்சான் இந்த வீட்டுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் நிறைவடையுது; அதை கொண்டாட தான், புதிய ஆடை அணிவிப்பு எல்லாம்...'' என்றான் செந்தில்.
பசிக்குது என வயிறை தட்டி காண்பித்த சின்சானிடம், ''பிரியாணி சாப்பிடுறீயா...'' என கேட்டான் சந்திரஜெயன்.
'ஓ...' என தலையாட்டியது.
''இங்க சைவ சாப்பாடு தான்; வேணும்னா, இட்லி, சாம்பார் தர்றேன்...'' என்றான் சந்திரஜெயன்.
உரித்து சாப்பிடுவது போல செய்கை செய்தது சின்சான்.
''அட... வாழைப்பழம் கேக்குறீயா...'' என்றான்.
தலையசைத்ததும், புன்னகைத்தான் சந்திரஜெயன்.
''கொஞ்ச நேரம் காத்திரு...'' என்றபடி, யாருடனோ அலைபேசியில் பேசினான்.
வீட்டு வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து, இரு வாழைக்குலைகளை இறக்கினர்; வாகனம் கிளம்பியதும், சின்சானிடம் திரும்பினான் சந்திரஜெயன்.
அது வாழைக்குலை நோக்கி ஆர்வமாக சென்றதைப் பார்த்து, ''சின்சான்... வாழைப்பழத்தை தொடாதே; நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வெச்சுக்கலாமா...'' என்றான் சந்திரஜெயன்.
'ம்... ம்...' என, தலையை அசைத்தது சின்சான்.
''ஆளுக்கொரு வாழைக்குலையை எடுப்போம். செந்தில், 'ஸ்டார்ட்' சொன்னவுடன், பழங்களை சாப்பிட துவங்கணும்; குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிகமா சாப்பிடுறாங்களோ அவங்க வெற்றி பெற்றவர்... சின்சான், போட்டியில் வெற்றி பெற்றால், தொடர்ந்து, 40 நாளைக்கு வாழைப்பழங்கள் தரப்படும்; தோல்வி அடைந்தால், தண்டனை உண்டு...'' என்றான் சந்திரஜெயன்.
எல்லாத்துக்கும், 'சரி' என, தலையை அசைத்தது சின்சான்.
ஆளுக்கொரு வாழைக்குலை வைக்கப்பட்டது.
விசில் ஊதி, ''துவங்கலாம்...'' என்றான் செந்தில்.

தொடரும்...
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.