டைனோ என் தோழன்! (3)


முன்கதை: காட்டு விலங்குகளையும், பறவைகளையும் வீட்டில் பராமரித்து வந்தான் சிறுவன் சந்திரஜெயன். அங்கு வளர்ந்த சின்சான் என்ற குரங்குடன், வாழைப்பழம் உண்ணும் போட்டியில் பங்கேற்றான். இனி -
புயல் வேகத்தில், வாழைப்பழங்களை விழுங்க ஆரம்பித்தான் சந்திரஜெயன்; போன பிறவியில் குரங்காய் பிறந்திருப்பான் போல் தெரிந்தது. தயங்காமல், 'லபக்... லபக்...' என விழுங்கினான்.
விசிலடித்தபடி, 'வேகம்... வேகம்...' என உற்சாகப்படுத்தினான் செந்தில்.
நிறைய வாழைப்பழங்களை முதலில் தின்று முடித்தான் சந்திரஜெயன். அவன் வலது கையை உயர்த்தி, ''சின்ன முதலாளி வெற்றி பெற்றார்...'' என்றான் செந்தில்.
அந்த நேரம், ''சபாஷ்டா சிங்கக் குட்டி...'' என்ற புதிய குரல், கைத்தட்டலுடன் கேட்டது.
சத்தம் வந்த பக்கம் திரும்பினர்.
'கோட் சூட்' அணிந்து, சந்திரஜெயனின் தாய்மாமா, விஞ்ஞானி யோகிபாபு நின்றிருந்தார்.
அவருக்கு வயது, 40; அப்துல் கலாம் போல பிரம்மச்சாரி; பம்பையாய் தலைகேசம்; கண்களில், 'பவர் கிளாஸ்' அணிந்து மீசை, தாடியுடன் காட்சி தந்தார்.
பூமியில் அழிந்து போன உயிரினங்களை பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார் யோகிபாபு. போன்சாய் மரவளர்ப்புக் கலையிலும் நிபுணர். போன்சாய் கலை என்றால், 80 அடி, 100 அடி உயரம் வளரக் கூடிய மரங்களை குட்டியாக, தொட்டிகளில் வளர்ப்பதாகும்.
இது, ஆசிய நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் பிரபலம். குறிப்பாக, எலுமிச்சை, அத்திமரம், பைன்மரம், ஆலமரம் மற்றும் புதர் செடிகளை போன்சாய் வடிவமாக அழகு மிளிரும் வகையில் வளர்க்கலாம்.
பழங்களை தின்று முடித்தவுடன், ''மாமா... எப்ப வந்தீங்க...'' என்றான் சந்திரஜெயன்.
சிரித்தபடியே, ''இதோ... இப்ப தான்...'' என்றார் யோகிபாபு.
அவரை கட்டி பிடித்து, நடனமாட ஆரம்பித்தான் சந்திரஜெயன்.
நடனம் ஆடியபடியே, காருக்கு சென்று, போன்சாய் மரம் ஒன்றை எடுத்து வந்து, ''இதை உன் படுக்கை அறையில் வை...'' என்றார் யோகிபாபு.
''வளர வேண்டிய மரங்களை, சித்திரக் குள்ளர் ஆக்குவது கொடூரம் இல்லையா மாமா...''
''காட்டில், சுதந்திரமாக, மரத்துக்கு மரம் தாவ வேண்டிய சின்சானை, வீட்டில் அடைத்து வைத்து வளர்க்கிறாய்; அது, தின்ன வேண்டிய வாழைப்பழத்தை நீ தின்று, போட்டியில் ஜெயிக்கிறாய். அது கொடூரம் இல்லையா...''
''உங்க கூட பேசி ஜெயிக்க முடியாது மாமா...''
இந்த உரையாடலின் இடையே, ''வாடா தம்பி... எப்படியிருக்க... இப்ப தான் வழி தெரிஞ்சுதா; மெலிஞ்சு துரும்பா போயிட்டியே...'' என்றார் சந்திரஜெயனின் அம்மா.
''நான் மெலிஞ்சு போயிட்டேனா... நல்ல கதை... இந்த முறை, 10 கிலோ கூடியிருக்கேன்...'' என்றார் யோகிபாபு.
''வாங்க மச்சான்... எப்படி இருக்கீங்க...''
வரவேற்று, நலம் விசாரித்தார் சந்திரஜெயனின் அப்பா.
''நல்லா இருக்கேன் மச்சான்... நீங்க எப்படி இருக்கீங்க...'' என பதிலுக்கு விசாரித்தார், யோகிபாபு.
''எனக்கென்ன குறைச்சல்... நல்லா இருக்கேன்... கட்டை பிரம்மச்சாரியா, 40 வயது வரைக்கும் இருந்துட்ட; எப்ப திருமணம் செய்துக்க போற...'' என்றார் சந்திரஜெயனின் அப்பா.
''ஆராய்ச்சி செய்வதையே திருமணமாக செய்து, குடும்பம் நடத்திட்டு இருக்கேன் மச்சான்...''
''என்ன அபூர்வமாக இந்த பக்கம் வந்துருக்க...''
''ஏன் வரக் கூடாதா...''
''எப்பவும் இங்கேயே இரு மச்சான்; இது உன்னோட வீடு; இங்க இருந்தே, உன் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்...''
''பெங்களூருவில் இருக்கும் பிரமாண்ட ஆராய்ச்சி கூடத்தை என்ன செய்றது; மருமகனை பார்க்க ஆசைப்பட்டு வந்தேன்...''
சந்திரஜெயனை துாக்கி இடுப்பில் வைத்தார் யோகிபாபு!
''என்னை உப்பு மூட்டை துாக்குங்க மாமா...''
''துாக்கிட்டா போச்சு...'' என கூறி, வீடு முழுக்க சுற்றி வந்தார்.
அப்போது, ''மாமா... இவ என் உயிர் தோழி தீவிதா...'' என அறிமுகப்படுத்தினான் சந்திரஜெயன்.
''வணக்கம்... உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கான் சந்திரஜெயன்; உங்களை பார்த்தால், ஆராய்ச்சியாளர் போல் தெரியல; காமெடி நடிகர் மாதிரி இருக்கீங்க...'' என்றாள் தீவிதா.
புன்னகைத்தபடியே, ''அப்படியா... சந்தோஷம்...'' என்றார் யோகிபாபு.
வளர்ப்பு மிருகங்கள் ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தினான் சந்திரஜெயன்.
யோகிபாபுவின் கைகளை பற்றி குலுக்கியது சின்சான்.
''வாழைப்பழத்தை வேகமாக சாப்பிட, தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கோ சின்சான்...'' என்றார் யோகிபாபு.
பதில் கூறும் விதமாக, 'குர்...' என்றது சின்சான்.
''மாமா... குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்...'' என்றான் சந்திரஜெயன்.

தொடரும்...

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.