தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

 


கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளதாக தெரிவித்து இருந்தார். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.



 

இது தொடர்பாக, 31-3-2022 அன்று தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டிய இருந்தார்.



மேலும், 15-4-2022 அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்திலும், தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.



இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29 ஆம் திகதி ஒருமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் விபரத்தை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.



இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்ன நடைபெற்ற விவாதத்தின்போது, பேரவையில் அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளும், இலங்கையில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தின என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.



தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளதோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமர் மோடியின் மேலான கவனத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.



வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்.


இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “இலங்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முன் வந்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சரின் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெய்சங்கர், தமிழ்நாடு தலைமை செயலாளர் வெளியுறவுத்துறையோடு இணைந்து செயல்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.