ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு!

 


இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.


தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கச்சத்தீவை இந்தியாவுக்கு இலங்கை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே கூறியிருந்தார்.


தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் மாநிலத்தின் முதலமைச்சருக்கு இருக்கத்தானே செய்யும் என்று கேட்கிறார் மிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிப்பதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து அரிசி, பால்மா, மருந்து வகைகள் உள்ளிட்ட பொருட்களை நிவாரண உதவியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18 ஆம் திகதி சென்னையிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

எனினும், தமிழ்நாடு முதலமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவரது இந்த கருத்து இலங்கையர் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின், இலங்கை - இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

´´இந்த அறிவிப்புக்கு பின்னர் யாழ் மாவட்டத்தின் பல சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டு உறவுகள் என்ற போர்வையில் உணவு பொருட்களை அனுப்பி, மீனவருடைய வயிற்றில் தொப்புள் கொடியாக இருக்கின்ற ஒரு செயற்பாட்டிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவெடுத்திருக்கின்றார். இவ்வளவு காலமும் மீனவருடைய பிரச்னையால், தொப்புள் கொடி அறாமல், உறவு வேண்டும், தொப்புள் கொடி உறவு வேண்டும் என்று காத்திருந்த மீனவருக்கு, ஒரு தொப்புள் கொடியை முதலமைச்சரே அறுப்பதற்கு முயற்சிக்கும் ஒரு செயற்பாடாகவே நாங்கள் இதை பார்க்கின்றோம்," என அவர் கூறுகின்றார்.

தமிழகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண உதவித் திட்டம் வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிடுமாறு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாகவும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா குறிப்பிடுகின்றார்.

கச்சத்தீவை இந்தியா மீளப் பெறுமாக இருந்தால், அது வடப் பகுதி மக்களுக்கு செய்யும் துரோகமாகவே தாம் கருதுவதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவிக்கின்றார்.


´´தமிழகத்தையும், தமிழக மக்களையும் இன்றும் நாம் நன்றியுடன் நினைவு கூர்ந்துகொண்டிருக்கின்றோம், அவர்கள் செய்த உதவியை. ஆனால், செய்த உதவிக்கு கை மாறு பெறுவதற்கான அவர் இந்த வார்த்தையை பயன்படுத்தினாரா, அல்லது கச்சைத்தீவை தாம்தான் பெற்றுக்கொடுத்தேன் என்ற வரலாறு சொல்வதற்காக பேசினாரா தெரியவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயற்சிக்கின்றாரோ தெரியவில்லை. கச்சத்தீவை இந்தியா பெறுமாக இருந்தால், வடப் பகுதி மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். எதிர்கால சந்ததிக்கு செய்கின்ற பெரிய அநீதி. இந்த சாபக்கேடு இரண்டு தலைவர்களையும் சார்ந்து நிற்கும்," என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவிக்கின்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்று வர்ணகுலசூரிய ஜுட் நாமல் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

´´மீன் வங்கியை அழிக்கும் நாடாகவே, இந்தியாவை நாங்கள் கருதுகிறோம். பலவந்தமாக மீன் வளங்களை இந்தியா அழித்து வருகின்றது. இந்த மீன்பிடி பிரச்னையை தமிழ்நாட்டில் அரசியலாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். எமது எல்லையாக நாம் கச்சத்தீவையே பயன்படுத்தி வருகின்றோம். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரே கிறிஸ்தவ தேவாலயம் கச்சத்தீவிலேயே அமைந்துள்ளது. இரண்டு நாட்டு மக்களும் அந்த இடத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஒற்றுமையை இல்லாது செய்து, இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தி செய்யும் இந்த நடவடிக்கைகளுக்கு நாம் எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். இலங்கைக்குள் இதற்கு முன்னராக ஒரு காலத்தில் பலவந்தமாக பருப்பு உள்ளிட்ட உணவு வகைகளை போட்டார்கள். பலவந்தமாக மாகாண சபை முறைமையை நாட்டிற்குள் கொண்டு வந்து, வெள்ளை யானையை இந்தியா செயற்படுத்தியிருந்தது. இந்தியா பிரிவினையையே அப்போதிலிருந்து செய்து வருகின்றது," என அவர் கூறுகின்றார்.

கச்சத்தீவு விவகாரம்: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

இலங்கை மீனவ அமைப்புகளின் குமுறல் தொடர்பாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ´´கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என்பது தமிழ்நாட்டு மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. வளைகுடா பகுதிகளில் சிறிது தூரத்தில் மீன் பிடிக்கச் சென்றாலே இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை கைது செய்கிறது. புதுக்கோட்டை, நாகப்பபட்டினம் ஆகிய பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்றாலும் இதே நிலைமைதான். தி.மு.க ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர், இதனைக் கடுமையாக எதிர்த்தார்.´´


´´தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் மாநிலத்தின் முதலமைச்சருக்கு இருக்கத்தானே செய்யும்? தற்போதைய சூழலில் எதாவது ஒரு வகையில் இலங்கைக்குள் நுழைவதற்கு சீனா விரும்புகிறது. அதேபோல், அனைத்து நாடுகளும் நினைக்கின்றன. அப்படியிருக்கும்போது கொடுத்த இடத்தைக் கேட்டு வாங்கும் நோக்கிலேயே முதலமைச்சர் இப்படியொரு கோரிக்கையை வைத்தார்´´ என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ´´ பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர், ´ இது சரியான தருணம், இலங்கைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து அந்நாட்டையும் மீட்க வேண்டும், நமது மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும்´ என்றார். இலங்கையில் துறைமுகத்தை சரிசெய்ய உதவி செய்வதாகக் கூறி 100 வருட காலத்துக்கு அந்தத் துறைமுகத்தையே சீனா வைத்துக் கொண்டது. ஆனால், கச்சத்தீவை மீட்பது என்பது தமிழ்நாட்டின் உரிமை. அதனை பிரதமரின் கவனத்துக்கு முதல்வர் கொண்டு சென்றுள்ளார். ´இந்தியாவில் இருப்பது இந்திய மீனவர்கள்தான். தமிழ்நாட்டு மீனவர்கள் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரையும் காப்பாற்ற வேண்டியது பிரதமரின் கடமை. அந்தவகையில் கச்சத்தீவை பெற்றுத் தர வேண்டும்´ என்பதுதான் எங்களின் கோரிக்கையாக உள்ளது. காரணம், மாநில அரசால் கச்சத்தீவை மீட்க முடியாது´´ என்கிறார்.

மேலும், ´´தமிழ்நாடு இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் இருக்குமா? இந்தியாவை வைத்துத்தான் யாழ்ப்பாணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு எதாவது பிரச்னை ஏற்பட்டால் இந்தியா தலையிடும் என்பதால்தான் யாழ்ப்பாண மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்´´ என்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.