முல்லைத்தீவில் ஆயிஷாவுக்கு நீதி கோரி போராட்டம்!

 


 சிறுமி ஆயிஷாவுக்கு நீதி கோரியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) காலை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டகாரர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று திரண்ட சிறுவர்கள் பெண்கள், ஆண்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நீதிவேண்டும் நீதிவேண்டும், சிறுவர்களை வாழவிடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நீதிகோரிய இந்த கவனயீர்ப்பு அண்மையில் 9 அகவை சிறுமியின் கொலை சம்பவம் முழு நாட்டினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றுவது அரசினதும் சமூகத்தினரும் கடமையாகும், இலங்கையில் சட்ட ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை குற்றவாளிகளை தப்பிக்கவைக்கும் நடைமுறை இலங்கையில் காணப்படுகின்றது.


சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கம் இணைய வேண்டும் 9 அகவை சிறுமியின் கொலையின் உண்மைத் தன்மை வெளிக்கொண்டுவர வேண்டும் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும் பெண்கள், சிறுவர்களுக்கான விசேட நீதிமன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் கவனயீர்ப்பின் அறிக்கையில் வாசிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணியின் போது கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் பாவனையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிககுறைவாக இருப்பதும் காரணம், சிறுவர்கள் மத்தியில் அதிகளவில் போதைப்பொருள் விதைக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் பட்டிணி வாட்டுகின்றது மறுபக்கம் எதிர்கால சந்ததியினரை வன்முறைவாட்டுகின்றது. இதற்காக சரியான பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

சிறுமிக்கு நடந்த கொடுமை பாராதூரமானது இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறன சம்பவம் நடைபெறவில்லை இதனை இன்று பாராளுமன்றங்களில் பேசுகின்றார்கள்.

இந்த ஆயிசாவிற்கு நடந்த படுகொலை இலங்கையில் நடந்த முதல் தடவையான சிறுவர் துஷ்பிரயோகம் அல்ல வித்தியா தொடக்கம் இன்று வரை சிறு பிள்ளைகள் கொலை செய்யப்படும் வரலாறு இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு பிரதான காரணமாக போதைப்பொருள் பாவனை என சொல்லி வருகின்றார்கள்.

இந்த போதை பொருளினை ஒழிப்பதற்கு இன்னும் சட்டத்தில் இடம் இல்லை என்று தான் நாங்கள் கருதுகின்றோம். எல்லாத்திற்கும் ஆணைக்குழு அமைக்கப்படுகின்றது. ஆனால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கோ அல்லது போதைப்பொருள் ஒழிப்பதற்கோ ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இதற்கான தனியான ஆணைக்கழுவினை நிறுவி தனியான சட்டத்தினை பாராளுமன்றத்தில் இயற்றி சிறுவர்கள் வாழ்வதற்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்க அரசிடம் வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் மக்களுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க. விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

- நிருபர் தவசீலன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.