இலக்கை நோக்கியே பயணம் இருக்க வேண்டும்.!


யானையின் சடலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது காகம் ஒன்று அந்த சடலத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தது.உடனடியாகப் போய் அதன் மீது அமர்ந்து கொண்டது.போதுமான இறைச்சியை கொத்திக் கொத்தித் தின்றுவிட்டு ஆற்றின் நீரைக் குடித்து ஆனந்தமாக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது மிகுந்த திருப்தியுடன் தனது இறக்கைகளை விரிந்துப் பறந்து ஆனந்தக் கூத்தாடியது.


காகம் யானையின் சடலத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டது ஆகா இது மிகவும் அழகான வாகனம் இங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. நாம் ஏன் இதை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய வேண்டும்?


ஆற்றங்கரையில் மிதந்து ஓடும் அச்சடலத்தின் மீது காகம் பல நாட்களாக கரைந்து கொண்டிருந்தது. பசி எடுத்தால் யானையின் சடலத்தை உண்பதும் தாகம் எடுத்தால் ஆற்று நீரை அருந்துவதும் என அதன் வாழ்வே ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தது.


பிரம்மாண்டமான நீர்நிலை அதன் வேகமான ஓட்டம் கரையோரம் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் அழகிய காட்சிகள் என எல்லாவற்றையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஒரு நாள் நதியானது இறுதியாகக் கடலை வந்து சேர்ந்தது.

நதி தன் இலக்கைக் கண்டுபிடித்து விட்டது. கடலைச் சந்திப்பதே அதன் இறுதி இலக்காக இருந்தது ஆனால் அன்று இலக்கற்றுப் பறந்து திரிந்த  அக்காகத்திற்கு மட்டும் அந்தநாள் மிகவும் துரதிர்ஷ்டமாகிப் போனது.


சில நாட்களாக நடந்த வேடிக்கை, முடிவுக்கு வந்தது. உணவு குடிநீர் தங்குமிடம் என எதுவும் இல்லாத இடத்திற்கு அந்த யானையின் சடலமும் அந்த நதியும் அதனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. எல்லா இடங்களிலும் எல்லையற்ற உப்பு நீர்  அக்காகம் அலைந்து திரிந்து சலித்துப் போனது பல நாட்களாக களைப்புடனும் பசியுடனும் தாகத்துடனும் நாலா திசைகளிலும் சிறகுகளை அசைத்து தனது கொடூரமான குரலால் கரைந்து கொண்டிருந்தது


கடலின் ஆழம் மற்றும் பரந்து விரிந்த மேகக் கூட்டங்கள் என அதன் முடிவற்ற திசைகளில் தேடியலைந்தது ஆனால் கடலின் முடிவை எங்குமே காண முடியவில்லை. கடைசியில் சோர்ந்து சோகத்தில் மூழ்கி கடலின் அதே வானளாவிய அலைகளில் விழுந்து மடிந்தது. அப்பொழுது பெரிய முதலை ஒன்று கடலுக்குள்ளிருந்து தனது தலையைத் தூக்கி அதனை மிகவும் லாவகமாக விழுங்கியது.


உடல் இன்பங்களில் ஈடுபடும் மனிதர்களும் அதே காக்கையைப் போலத்தான் நகர்கிறார்கள் அவர்கள் உணவையும் தங்குமிடத்தையும் நிரந்தரம் என்று எண்ணிக் கொள்கிறார்கள் இறுதியில் எல்லையற்ற உலகப் பெருங்கடலில் பயணிக்கிறார்கள்.


யாரை வெல்வது?

யாருக்காக தோற்பது?

யாருக்காக இந்த சண்டை?

யாருக்காக இந்த ஓட்டம்?

யாருக்காக இந்த வாழ்க்கை?

யாருக்காக இந்த ஆணவம்?


வந்தவன் ஒருநாள் போவது உறுதி 


உங்கள் கனவுக் கோட்டைகளை எல்லாம் மரணம் ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டுச் சென்றுவிடும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்


                  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.