கவிபாடும் நினைவுகள்!!

 


என் தனிமைகள் 

உன் நினைவுகளால்

அலங்கரிக்கப்பட்டவை 


பெரிதான ஆசை எதுவுமில்லை

உன் முகம் பார்த்திட வேண்டும் 


காலம் வரமாய் தந்த

பந்தங்கள்

காலாவதியாகிட 


அனுதினமும் உதிர்ந்து போகும் 

மலர்களைப்போல்

கானலாக தொலைவாகிச் 

சென்றுவிடும் உறவுகள் 


நீர்க்குமிழிபோல் 

உடைந்து செல்லும்

கண்களின் நீரோடு

காத்திருப்பு


ஜீவநதியாக

நெஞ்சோரம் வந்து

கவிபாடும் நினைவுகள்

தனிமையை பரிசளித்துச்

சென்று விடுகிறது 


ஆலயம்போலான  இதயத்தில்

சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்

உந்தன் நினைவுகளோடு 


குமுறிக் குமுறி பிதற்றுகிறேன்

பேசித் தீர்த்திட முடியாமல்

பல மர்ம முடிச்சுக்கள் 


இதமான மனம்

ஏக்கங்கள் சுமந்தபடி

எரியும் சுடரிற்குள் 

வெந்து தணிகிறது...!! 


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.