பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் 2021 /2022 கல்வி ஆண்டின் நிறைவு நிகழ்வு📸!
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் 2021 /2022 கல்வி ஆண்டின் நிறைவு நிகழ்வு இன்று (19.06.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை கீதத்தடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.செல்வகுமார் அவர்கள் பள்ளியின் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் புதிய கல்விஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய நடைமுறைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து கருத்துரைத்த அவர், எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தமிழ்ச்சோலை விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் கருத்துரைத்திருந்தார்.
பெற்றோர்களின் சார்பிலும் பள்ளியில் உள்ள குறைநிறைகள் குறித்து, தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த தலைமை நிர்வாகி பெற்றோரின் கருத்துக்களை உள்வாங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. வயலின் மாணவர்களின் இசைநிகழ்வில் செல்வி அலேகா, செல்வி மரின், செல்வன் அபினேஷ், செல்வன் அசிதன் மற்றும் செல்வி சிந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவி செல்வி ஹரிஹரிணியின் பாடலுக்கு தண்ணுமை மாணவர்களான செல்வன் தசிகரன், செல்வன் பகீரதன் ஆகியோர் தண்ணுமை வாசித்தனர்.
வளர்தமிழ் 1 மாணவர்களான செல்வி அபிரா, செல்வி நன்சிகா ஆகியோர் “தமிழில் பேசுவோம்; தமிழராய் வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்வு ஒன்றை முன்மாதிரியாக நிகழ்த்தியிருந்தனர். இது அனைவரையும் கவர்ந்திருந்தது.
தண்ணுமை இசையை செல்வன் ஹரிகரன், செல்வன் எமானுவல், செல்வன் பகீரதன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
ஆசிரியர்களின் சார்பில் திருமதி அன்பரசி நவீந்திரன் அவர்கள் கருத்துரைத்திருந்தார். சோதியா கலைக்கல்லூரியின் ஆரம்பகாலம் பற்றியும் மாணவர்களின் ஆற்றல் பற்றியும் தெரிவித்திருந்த அவர், புதிய கல்வியாண்டில் நாம் உத்வேகத்துடன் பயணிப்போம் என உறுதியோடு தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு வளர்தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்களின் சார்பில் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை நிறைவுசெய்த செல்வி லினோர்த்தனா கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்ததுடன் தமிழ் எமது அடையாளம் எனவும் இதனை நிறைவுசெய்தது தனக்குப் பெருமை எனவும் – பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தமிழ் படிக்க ஊக்குவிக்கவேண்டும் எனவும் – கேட்டிருந்தார். இது ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது.
பள்ளிமட்டத்தில் இடம்பெற்ற திருக்குறள் திறன் போட்டி மற்றும் பாலர் நிலைத் தேர்வுகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
கலந்துகொண்ட அனைவரும் சிற்றுண்டி, குளிர்பானம் அருந்தி மகிழ்வோடு விடைபெற்றனர்.
புதிய கல்வி ஆண்டு வரும் 03.09.2022 சனிக்கிழமை ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)
கருத்துகள் இல்லை