தாயாரின் இறுதிக்கிரியைகளுக்காக யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்ட அரசியல்கைதி!


1996ம் ஆண்டில் மத்தியவங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பென குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, 26வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் குட்டி என அழைக்கப்படும் விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் சில நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்தியிருந்தார்.


அவரின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள அவரின் வீட்டில் நடைபெற்றது. இறுதிக்கிரியைகளுக்காக அவரது மகனான குட்டி அவர்கள் கொழும்பிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, ஒருசில மணித்தியாலத்தில் மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


2017ஆம் ஆண்டு இவரின் தந்தை மரணமடைந்ததையடுத்து, இறுதிக்கிரியைகளுக்காக குட்டி அவர்கள் யாழ்ப்பாணத்திலிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அதன் பிறகு 05 வருடங்களின் பின்னர் இன்றைய தினமே மீள யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.


"என்ர பிள்ளைக்கு என்ர கையால ஒரு பிடி சோறெண்டாலும் ஊட்டிப் போட்டுத்தான் உயிரை விடுவன். அவன்ர மடியில தான் என்ர சீவன் போகும். அவன் தான் எனக்கு கொள்ளி வைக்கோனும்" என்ற ஆசைகள், கனவுகளுடன் 26வருடமாக காத்திருந்த ஒரு தாய், தமிழனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தினால் ஆசைகள், கனவுகள் சிதறடிக்கப்பட்டு பௌத்த சிங்கள பயங்கரவாதத்தினால் சாகடிக்கப்பட்டுள்ளார்.


அதிகுறைந்த வயதில் சிறைப்பிடிக்கப்பட்டு, அதிகூடிய வருடங்கள் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி இவர் தான். இவரைப்போல பல அரசியல்கைதிகள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 


இவ் அரசியல்கைதிகளின் பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு உழைக்கும் சக்தியாக இவர்களே இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்குள்ளேயே வாழ்ந்துவந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை அவர்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. 


சிறைக்குள் நீண்டகாலமாக அடைத்துவைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் உடல் உள ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே மனிதாபிமான அடிப்படையில் அனைத்து அரசியல்கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். 


"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செவத்தை தேய்க்கும் படை" - குறள் எண் 555


பொருள் - தவறான ஆட்சியால் துன்பப்படும் மக்களின் கண்ணீர்  நாட்டின் செல்வத்தை அழித்துவிடும்.


சோகத்தில் பெரும் சோகம் புத்திரசோகம். அந்த சோகத்தால் அழும் தாய்மாரின் கண்ணீர் இந்த நாட்டை மேலும் மேலும் அழித்துவிடமுன் அரசியல்கைதிகளை விடுவித்துவிடுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.