ஆப்கானை உலுக்கிய பயங்கர நடுக்கம் – 920 பேர் பலி

 


ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 920ஆக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.


தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், 51 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்திருந்தது.


இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.


ஆனால் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர். அதேபோல் கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களிலும் வீடுகள் இடிந்தன.


இந்த நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்ந்துள்ளது.


இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100இற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.


ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் அங்கு சென்றனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.