வடக்கு சுகாதாரத் துறையில் நிர்வாக திறன் உடையவர்கள் எவருமே இல்லையா?

 யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (01) வெள்ளிக்கிழமை கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.


தற்போதைய நேரம், இரவு 8 மணியை தாண்டியும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சுகாதாரத் துறை பணியாளர்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கின்றார்கள்.
இவர்களில் அதிகமானோர் பெண்கள்.
பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் அவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
இன்று அதிகாலை தொடக்கம் இரவு வரை இவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்ததால்  உடல்,  உள உபாதைகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்
எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மற்றும் காத்திருப்பவர்களில் நூற்றுக்கணக்கானோர் இன்று வைத்தியசாலைகளில் இரவு நேர பணிகளுக்காக செல்ல இருந்தவர்கள்.
இவர்களில் பலர் காலை 6 மணியிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசைகள் காத்திருந்து விட்டு பிற்பகல் 5 மணிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளாமலே தமது கடமைகளுக்காக சென்றிருக்கின்றார்கள்.
வலிகாமத்தில் உள்ள ஏறக்குறைய பத்தாயிரத்துக்கு அதிகமான சுகாதாரப் பணியாளர்களை, அதாவது வைத்தியர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சுகாதார பணியாளர்களை ஒரே இடத்தில் வரவழைத்து எரிபொருள் விநியோகிக்க முடியும் என்ற முடிவை யார் எடுத்தது?
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் கூட கொக்குவில் பிரதேசத்துக்கே வருகை தந்து எரிபொருளை பெற்று திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
 அவர்கள் இங்கு வந்து எரிபொருளை பெற்று திரும்புவதற்கு அதிகளவான எரிபொருள் வீணாகிவிடும்.
தற்போதைய நெருக்கடி நிலையில் இது அவர்களை எந்த அளவு பாதிக்கும் என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் சிந்திக்க முடியாமல் போனது ஏன்?
வலிகாமம் மற்றும் தீவகத்தை உள்ளடக்கி, ஒரு போதனா  வைத்தியசாலை, இரண்டு ஆதார வைத்தியசாலைகள், 10 வரையான பிரதேச வைத்தியசாலைகள், இருபதுக்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், இவற்றைவிட வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், பண்ணை மார்புநோய் சிகிச்சை நிலையம் போன்றவற்றை உள்ளடக்கினால் 10 ஆயிரத்துக்கு அதிகமான சுகாதார துறை பணியாளர்கள் உள்ளனர்.
சித்த மருத்துவத் துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கான உள்ளனர்.
யாழ் போதனா வைத்திய சாலையில் மாத்திரம் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் பணியாளர்களை உள்ளடக்கி அண்ணளவாக 3 ஆயிரத்துக்கு அதிகமான பணியாளர்கள் உள்ளனர்.
இத்தகைய பெருமளவான பணியாளர்களுக்கு  ஒரே இடத்தில் அதுவும் ஒரே நாளில் எரிபொருளை வழங்கி முடிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது யார்? வடக்கு மாகாண சுகாதாரத்துறை இந்த அளவுக்கு பலவீனமான நிர்வாக திறமையுடன்தான் இயங்குகின்றதா?
ஊர்காவற்றுறை உள்ளிட்ட  தீவுகள் மற்றும் நீண்ட இடங்களில் இருந்து கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு இன்று 2000 ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டிருக்கின்றது.
எவ்வாறெனினும் அவர்களுக்கு ஒரு லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் போக்குவரத்திற்காக செலவாகி இருக்கும்.
மேலும் காலை ஏழு மணியிலிருந்து பிற்பகல் வரை வரிசையில்  அவர்கள் காத்திருந்த வேளை மதிய உணவு மற்றும் குடிபானங்களுக்காக ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகி இருக்கும்.
ஆக அவர்களுக்கான எரிபொருள் மீதி என்பது எவ்வளவு  என்பதை இந்த முடிவை எடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சிந்திக்காமல் போனது ஏன்?
வலிகாமத்தை பொறுத்தவரை யாழ்.  போதனா வைத்தியசாலை, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை,  வேலணை பிரதேச வைத்தியசாலை மற்றும் யாழ். நகரில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்களை உள்ளடக்கி யாழ் நகரில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தேர்வு செய்திருக்க முடியும்.
அதேபோன்று ஏனையவர்களுக்கு கொக்குவில் மற்றும் சங்கானை எரிபொருள் நிரப்பு நிலையங்களை தேர்வு செய்திருக்க முடியும்.
அவ்வாறு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தால் இன்று ஒரே நாளில் ஏராளமான சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருளை விநியோகித்திருக்கலாம்.
இதை விடுத்து வலிகாமத்தில் உள்ள அனைத்து சுகாதார பணியாளர்களையும் ஒரே இடத்தில் எரிபொருளுக்காக அழைத்து அவர்களை அவலங்களுக்குள் தள்ளியிருக்கின்றமை வடக்கு மாகாண சுகாதார துறையின் பலவீனமான நிர்வாக திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.
-என்.பிருந்தாபன்
பிற்சேர்க்கை: இரவு 9.30 மணி
இரவு 9 மணிக்கு பெற்றோல் முடிந்துவிட்டது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணி செய்துகொண்டிருந்த மருத்துவத்துறை சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நின்றவர்களுக்கு இத்தகவலைக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
ஆனால், கொக்குவில் சந்தியால் திரும்பி ஆனைக்கோட்டை வீதி வரை நீண்டிருந்த வரிசையில் நின்றவர்களுக்கு இந்த விடயம் தெரியாது.
அவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக அங்கு காத்திருந்துவிட்டு பின்னர் ஆளாளுக்கு தகவல் தெரிவிக்கவே அந்த இடங்களை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
நீண்ட வரிசையில் நின்ற மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு இத்தகவலை தெரிவிக்கவேண்டிய கடமை அங்கு பணியில் நின்ற மருத்துவத்துறை சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு இருக்கவேண்டிய நிலையில், அவர்கள் ஏனைய பணியாளர்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.