இராவணன் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய தென்னிலங்கை அரசியல்!!
இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை; சிவ வழிபாடும் கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணி காணப்படுகின்றது. இராணவன் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால், இராவணன் என்ற மன்னன் இருந்தாரா, அவர் தமிழரா, சிவ வழிபாட்டில் ஈடுப்பட்டாரா என்பதற்கு எவ்வித சான்றும், வரலாறும் இல்லை. திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது.
இதில் 18 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரம் கோயிலுக்குச் சொந்தமானது. ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளைச் சிங்களவர்கள் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வீதி இருமருங்கில் உள்ள கடைகளைப் புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதமற்றவர். திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணியே காணப்படுகின்றது.
திருக்கோணமலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன. அவற்றில் மூன்று தூபிகள் கடலை நோக்கியதாக அமைந்ததால் அது திருக்கோணேஸ்வரம் எனப் பெயர் பெற்றுள்ளது.
அத்துடன் மகாவம்சத்திலும் இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, எமக்கும் வரலாறு தெரியும். நாங்களும் குறிப்பிடுவோம். திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
நாங்கள் பாதுகாக்கின்றோம். அதுபோல் நீங்களும் குருந்தூர்மலையைப் பாதுகாக்கக் கவனம் செலுத்துங்கள். அங்கு தமிழ் அடிப்படைவாதிகளால் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை