எனக்கான வாழ்தலில்!!
எனக்கான வாழ்தலில் நிறைய இருக்கின்றது
அழகான காலையில் இனிதான ஒரு விடியல்
வேலைக்கான ஓட்டத்தில் எனக்கான ஓர் பொழுது
கைகள் கோர்த்து கதைகள் பேசி நடக்க உற்ற நட்பு
மாலையில் கடற்கரை காற்றை ரசித்தபடி பிடித்த பாடல்
ஜில்லென்ற மழை.. கூதல் காற்று.. சுடும் வெயில்..
நள்ளிரவில் வீதியோரக்கடையில் சூடான தேநீர்
நிறைய பார்க்க, பார்த்ததைப் பகிர, விவாதிக்க ஆழமான சிந்தனை
மனதோடு கதைகள் பேசவும், சுற்றங்கள் மறக்கவும் நீண்ட தனிமை
எனக்கான வாழ்தலில் நிறைய இருக்கின்றது
நீண்ட பயணத்தில் தொலைந்து போய், என்னை நான் நானாக மீட்டெடுக்க
அறிமுகற்ற மனிதர்களிடையே
முகமறியா ஒற்றைப் புன்னகையுடன்
குதூகலமாக திரியும் ஒரு சாதாரண மனிதியாக
இன்னும் நிறையவே இருக்கிறது
என் வாழ்தலுக்கான நம்பிக்கை .
-யசி-
16.09.2022
யாழ்
கருத்துகள் இல்லை