மீட்பின் இரட்சகரே மீண்டும் பிறப்பீரோ....

 


மீட்பின்  இரட்சகரே

மீண்டும் பிறப்பீரோ..

இழந்த எம் இருப்பை

சிறை மீட்டுத் தருவீரோ....கலாசார பூமியென்று

மார் தட்டிக் கொண்ட ஒரு நிலம்

கதறித் துடிக்கிறது 

இழி செயல்கள் 

நிறைந்து போனதால்...


வீரத்தின் விளை நிலம்,

காதலின் அர்த்தம் கண்டு

களிப்புற்று  நின்ற நிலம்,

ஆன்மீக நெறி சொன்ன 

அற்புதமான தாய் நிலம் 

ஊமையாய் அழுகிறது...இன்று. 


போதையில் நிறைந்து

காமத்தில்  கரைந்து 

பேதமேதும் தெரியாமல்

 பிழைக்கின்றது பல உயிர்கள்...


தந்தையால் மகள் வன்புணர்வு, 

இளைஞன் திடீர் மரணம், 

யுவதி தற்கொலை, 

பச்சை குழந்தை பாலியல் வன்புணர்வு,

வாள் வெட்டு மரணம் 

இப்படி நீள்கிறது அன்றாடச் செய்திகள்..


தீராத தாகங்கள் அன்று

எதை நோக்கி இருந்தது?

மனக்கங்குகள் இன்று 

ஏன் கருகிப்போனது?


ஒரு சந்ததியின் அழிவு

ஒரு இனத்தின் அழிவல்லவா...

இந்த திட்டமிட்ட அழிவுக்கு

எங்கள் உறவுகளே உடந்தையா....


கடலோரம் ஒரு காலத்தில் 

கதைகள் பல சொன்னது.

ஈரநிலத்து மனிதர்கள் 

இரும்பென நின்றனரே... 


கடலலையின் அழகிப்போ 

கலக்கத்தை தருகிறது..

கஞ்சா வருகுதென்று

கனக்கிறது மனமிங்கு.


 


உலகிற்கு ஒரு சேதி சொல்ல

உயிர்ப்பறவைகள் துடித்தன.

நீதியின் வாளெடுத்து 

நெஞ்சுகளைக் கிழித்தன.


பாலை நிலங்கள் பசுமை கொள்ள

இருளும்  மறைந்து விடியல் பூக்க

 தீரர்கள் வாழ்ந்து போன

புனித பூமியிது...


உணர்வு தொலைத்த அவர்களின் 

ஒப்பற்ற தியாகங்கள் 

அட....

உலுக்கவில்லையா நெஞ்சங்களை...


பேராண்மை சொன்னதேசம்

பொடிப்பொடியாய்

சிதறுதிங்கே..

வல்லினம் ஒன்று 

வாழ்விழக்கிறது...

மெல்ல மெல்ல...


வரலாற்று ஏடுகள்

 வெற்றிக்கதை படிக்க

இறுமாந்த மறவர் இன்று 

தூய்மை இழக்கலாமோ...


செல்லரித்துப் போகிறது 

எங்கள் தலைமுறை. 

நாளைய தூண்கள்

 நசுங்குதல் முறையோ...


வானப்பூக்களாய் மிளிர்பவர்கள்

வடிப்பாரே கண்ணீரை..

இவர்களுக்காகவா 

உயிரீந்தோம் என்று...மீட்பின் இரட்சகரே

மீண்டும் பிறப்பீரோ... 

இழந்த எம்  இருப்புகளை

சிறை மீட்டுத் தருவீரோ..


கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.