இரா. சம்பந்தன் தொடர்பில் அவதூறு - எச்சரித்து விடுவிப்பு!!

 


ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தான்னால் மீறப்பட்டுள்ளது என்பதைக் குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரி பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்திலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

தண்டனை வழங்கும் உரிமை

அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுவாகப் நாடாளுமன்றம் தொடர்பில் அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டால் நாடாளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் காணப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் எச்சரிப்பதற்கு அல்லது ஆறு மாதங்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் உள் நுழைவதைத் தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும், ஏதாவது தவறு இழைக்கப்பட்டிருப்பதாக குழுவில் தீர்மானிக்கப்பட்டால் அதனை உயர் நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தலைவரினால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.