ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை

 


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் நேற்று (04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “xcl technologies lanka (pvt) ltd என்ற நிறுவனம் கடந்த 12 வருடங்களில் 5 ஆயிரத்து 325 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். இது நாட்டிற்கு நல்லதொரு விடயம் தான்.

எனினும் வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம் என வெளியிடங்களிலிருந்து வருகை தந்து இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பில் தங்களது அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஏனெனில் குறித்த ஊழியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் தங்குமிடம், உணவு என ஊழியர்கள் அதிகளவில் பணத்தினை செலவழிக்கின்றனர். இதனால் குறைந்தளவான பணமே அவர்களிடம் எஞ்சியுள்ளது.

எனவே, கொழும்பிற்கு வெளியேயும் குறித்த நிறுவனம் தங்களது அலுவலங்களை திறந்தால், அவர்களின் வியாபாரம் விருத்தியடையும் என்பதுடன், நாடும் நன்மையடையும், ஊழியர்களும் நன்மையடைவார்கள்.

அத்துடன், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான கொள்கைகளை வகுக்கவில்லை.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தை திருத்தம் செய்வதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. கடந்த ஓரிரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஏற்றுமதி அதிகரிக்கப்படவில்லை, மாறாக ஏற்றுமதி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்தது.

சட்ட திருத்தங்கள் செய்வதால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது, கொள்கை ரீதியில் நடைமுறைக்கு பொறுத்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அரசாங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் யுவதிகளை பின்தொடர்ந்து செல்கிறது.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை.

மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை பாராளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.