பாரிய மோசடியில் ஈடுபட்ட யாழ். நாவாந்துறைச் சகோதரிகள் கைது!!


பணமோசடி வழக்கில் யாழ்ப்பாணச் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி  செய்ததாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகின்றனர். 


சந்தேகத்திற்குரியவர்கள் யாழ்ப்பாணம் - நாவாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 30 மற்றும் 34 அகவைகளையுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


வர்த்தகராக இருந்த தமது காலஞ்சென்ற தந்தையின் பெயரில் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை சட்டரீதியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட நோர்வே இலங்கையரான தொழிலதிபரிடம் பணம் பெற்றுள்ளனர்.


2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நோர்வேயில் வசிக்கும் குறித்த இலங்கையரிடமிருந்து கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி வேறு சில தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


நோர்வே தொழிலதிபரினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த நிதி மோசடிக்கான போலி ஆவணங்களை தயாரிக்கும் நோக்கில், நீதிமன்ற நீதிபதிகள், வங்கி முகாமையாளர்கள், வழக்கறிஞர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் கொண்ட ஆவணங்களை குறித்த சகோதரிகள் வைத்திருந்த நிலையில் அவற்றையும் விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


சந்தேகத்திற்குரிய சகோதரிகள் இருவரும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.