பூநகரியில் அமைதிப் பேரணி

 கடலட்டைப் பண்ணையை விரைவுபடுத்த வலியுறுத்தி இன்று பூநகரியில் அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கற்றொழிலாளர்கள்  கலந்து கொண்ட இந்தப் பேரணி இன்று பூநகரி அன்னை மரியாள் தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன், பூநகரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால், நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணையை அமைப்பதற்கு தீர்மானித்து, அதற்கான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ள கிராஞ்சிக் கடற்றொழிலாளர்கள், தமக்கான அனுமதியை வழங்குவதற்கு தேவையற்ற காலஇழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன்,  தமது ஆதங்கத்தை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த அமைதி முறையான பேரணியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கிராஞ்சிப் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 கடற்றொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட திணைகளங்களின் ஆய்வு அறிக்கைகளுக்கு அமைவாக, தாங்கள் பூர்வீகமாக கடற்றொழிலில் ஈடுபட்ட பகுதிகளில், அமைத்திருக்கும் கடலட்டைப் பண்ணைகளை, சட்டவிரோதப் பண்ணைகளாக காண்பித்து, குறுகிய நோக்கம் கொண்ட சிலர்  மேற்கொண்டு வருகின்ற போராட்டத்திற்கும், இன்றைய பேரணியில் கலந்து கொண்டோர் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

கிராஞ்சியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோர், பிணாமிகளின் பெயரில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதாக தெரிவித்த கடற்றொழிலாளர்கள்,    கிராமத்தை சேர்ந்த அனைவரும் கடலட்டைப் பண்ணைகளை அமைத்து பொருளாதார ரீதியில் வலுவடைந்தால், கிராஞ்சி கிராமத்தில் தமது ஆதிக்கம் கைநழுவிப் போய்விடும் என்று அஞ்சுகின்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலரே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், அநீதியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் போராட்டத்திற்கு, குறுகிய அரசியல் நலன்களுக்காக ஆதரவு தெரிவித்த அரசியல்வாதிகளுக்கும், கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுக்கும் எதிரான பதாகைகளும் இனறைய பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.