நாடெங்கும் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி கைது!!

 


மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான இளம் யுவதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த கொள்ளை சம்பவ்க்கள் தொடர்பில் யுவதி உட்பட ஐந்து பேரை களுவாஞ்சிகுடி பொலிஸார் நேற்று (20) கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் , கடந்த 16 ஆம் திகதி மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 ஆண்கள், ஒரு யுவதியை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொச்சிக்கடை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.


நான்காவது சந்தேகநபர் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் எனவும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது சந்தேக நபர் கொழும்பில் நகை வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதி அழகுக்கலை நிபுணர் என தெரிவித்த பொலிஸார், அவர் மணப்பெண் அலங்காரத்திற்கு செல்லும் வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளைக்கும்பலிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி மேக்அப் யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையில், கொள்ளையர்கள் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

யுவதியுடன் நெருக்கமான உறவில் இருந்த நபர் ஒருவரே இந்த கொள்ளையர் குழுவை வழிநடத்தியதாகவும், அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த நபர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்புவதுடன் தொடர்புடையவர். தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.


கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 3 அமெரிக்கத் தயாரிப்பான 7.65 மிமீ தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, இரவுக் கொள்ளைகளுக்கான இருப்புத் தடி, போலி நம்பர் பிளேட் கொண்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள், மொபைல் போன்கள், 120 கிராம் தங்கக் கட்டிகள், தங்கச் சங்கிலி உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைதான சந்தேக நபர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.