ஜனாதிபதி வெளியிட்ட புதிய தகவல்!

 


உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுகாதாரத் துறைக்கு அதிக அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஒதுக்கி வருவதாகவும் கூறினார்.


இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCMM) 6வது வருடாந்த கல்வி அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு கட்டுநாயக்க ஈகள்ஸ் லகூன் ஹோட்டலில் நேற்று (24) நடைபெற்றது. “நெருக்கடியான காலங்களில் இராணுவ மருத்துவத்தின் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் இந்த ஆய்வமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் மருத்துவப் படையணிகள், யுத்த காலத்தில், இராணுவ மருத்துவ சேவையை வடக்கு கிழக்கில் அதிகமாக பயன்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை பிராந்தியத்தின் சிறந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றுவதற்கும் சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


மேலும், அரசு வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், தனியார் வைத்தியசாலைகளுக்கு கட்டணம் செலுத்தாத வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


யுத்தத்தை எதிர்கொண்டதைப் போலவே, 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போதும், வெள்ளத்தின்போதும் கொவிட்-19 காலப்பகுதியிலும் இராணுவ மருத்துவப் பிரிவினர் ஆற்றிய சேவையின் மூலம் அவர்கள் இராணுவத்திலும் சிவில் துறையிலும் அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


இலங்கையில் இராணுவ மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி தற்போது முழுமையான மருத்துவக் கட்டமைப்பாக வளர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பேராசிரியர் செல்வநாயகம் நிர்த்தனன் கலந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவர் எயார் கொமடோர் நிலுகா அபேசேகர மற்றும் கல்லூரியின் செயலாளர் விங் கமாண்டர் ஹிமாலி மெண்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதியின் பிரதிநிதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்துடன் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிபர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.