நினைவுகளாய் வந்து வதைக்கிறது!

 


அவனென சுருக்கிவிட்டது

என்னுலகம்

தூக்கணாங் குருவிக் கூட்டைப்போல்

ஒய்யாரமாக ஆடி அசைகிறது

அவனின் நினைவுகள் 


கனவுகளில் எழுதும்

கவிதைகளில்கூட

அவனேதான் கதாநாயகனாய் அமர்கிறான் 


இதென்ன விந்தை

தித்திக்கப் பேசுகிறான்

குறும்புத்தனங்கள் புரிகிறான்

அத்தனை நேசத்தையும் 

அள்ளி வீசுகிறான் 


அதனால்தானோ 

என்னவனின் இருப்பே

மற்றோர் உள்நுழைய முடியாமல் 

தடுப்புச்சுவராக இருக்கிறது 


அவனின் நிழல்தேடி அலையும்

ஆதி மனிசியாய் நான் 


வேப்பங் கசப்பாய்தான் 

அவனில்லா இவ்உலகம் 

சூல் கொண்டு அசைகிறதெனக்கு


பட்டாசு சத்தம் கேட்டாலும் 

அன்று

அவன் களத்திடை நிற்கும்போது 

நான் தவித்த கணங்கள்

நினைவுகளாய் வந்து வதைக்கிறது


அடங்காப்பற்றிலே

காணாமல் ஆக்கப்பட்டவனே

நீயெனக்குத் தந்து சென்ற

பரிபூரண அன்பால்தான்

ஆழ்ந்துறங்குகிறது என் இதயம் 


ஜென்மம் முழுவதற்கும்

நான் கண்டெடுத்த

பெரும் புதையல் நீயல்லவா..? 


-பிரபா அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.