நூலுரை - கோபிகை!!

 




"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு"  என்கிறார் பொய்யாமொழிப்புலவர்.

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும் என்பது குறளின் பொருளாகும். இத்தகு அறிவுடமைக்கு ஒத்தவராய் காண்கிறேன் பூங்கொத்து சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அவர்களை.

காலத்தால் கனிந்து , எழுத்தால் முதிர்ந்து, எங்கள் கலாசாரத்தோடும் பண்பாட்டோடும் உரிமை மீட்போடும் வேரோடிப்போன ஒரு உன்னதமான தந்தைக்கு,  அவரது படைப்பிற்கு,  முதலில் என் சிரம் தாழ்த்தி என மனஏட்டில் அவரது படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தை சிற்றுரையாய் இங்கு  பதிவிடுகின்றேன்.

வாழ்வியலின் நாடி நரம்புகளை ஆழ்ந்து நோக்கி,  ஆராய்ந்து, அதன் சிறு பொறிகளை ஊதிக்கனலாக்க வல்ல எழுத்துக்களை எடுத்தியம்பி,  குமுகாயத்தின் மாற்றத்திற்கு வழிகோலுபவையாகவே இந்தக் கதைகளை நோக்கமுடிகிறது.

ஜனனமும் மரணமும் கடவுள் தருவது, இடைப்பட்ட வாழ்க்கை என்பது நாமே தீர்மானிப்பது, எமது தேடல்களும் எமது வாழ்க்கை நடைமுறைகளுமே எம்மை இந்த சமுதாயத்திற்கு அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அந்த வகையில் காலதேவனின் கௌரவம் பெற்ற ஒரு உன்னதமான படைப்பாளியே இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

இவர் எடுத்துக்கொண்ட கதையின் கருக்கள், அதை நகர்த்திய விதம், இரண்டுமே மிக எளிமையான ஒன்றாகும். பாமரனும் விளங்கும் வகையில் படைப்புகளைப்புனைந்து தருபவர்கள் மக்களின் மனதில் சட்டென்று பதிந்துவிடுகின்றனர். பூங்கொத்தும் அதன் ஆசிரியரும் மக்களின் மனதில் பதிந்துவிடுவர் என்பதில் ஐயமில்லை.

இருபது சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில்  ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றது. மதம் சாராது, இனம் சாராது,  நடுநிலைப் போக்கில் நின்று ஒரு படைப்பாளியால் ஒரு படைப்பை உருவாக்க முடிகிறது என்றால் அந்தப் படைப்பும் படைப்பாளியும் பாராட்டுப் பெறுவர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

வாங்கி வளர்த்தவன், ஆருயிர்க்கணவரை, மர்மச்சதி, புயல், துறவு, சகுந்தலா தந்த துயர், அன்பு, சிற்றம்பலம் தாத்தா, வந்தவன் வீசிய வாள், நட்பு, மிரட்டல்காரன், நீர்கொழும்பிலே, விடுதலைக்குப்பின் நடந்த கொலை, இப்படியாக நகர்கிறது கதைத்தலைப்புகள்.

சாதாரண மக்களின் வாழ்வியலை, அதன் எண்ண ஓட்டங்களை இங்கு பிட்டுப்பிட்டு வைத்திருக்கின்றார். 'வாங்கி வளர்த்தவர்கள் தாங்கி நிற்பார்கள்' என்பதை இவரது முதல் கதை கூறுகின்றது.

பிள்ளையற்ற ஒரு தம்பதியின் பெருந்தன்மையான சிந்தனையையும், பெற்றெடுக்காவிட்டாலும் பிள்ளையின் உணர்வுகளோடு ஒன்றிப் போவதில் எந்தத் தாய்மனமும் விதிவிலக்கில்லை என்பதையும் மிக அருமையாகத் தொட்டுக் காட்டியுள்ளார்.

'ஒரு குடும்பத்திடம் சட்டரீதியாக இவனைத் தமது வளர்ப்பு மகனாகக் கையேற்று.. சுதந்திரன் என்று பெயரிட்டு அன்பைச் சொரிந்து வளர்த்தனர்.

'அந்தப் பிள்ளை அழுதால் மகேஸ்வரி துடித்துப்பதைத்து எழுந்து ஓடிப்போய்,  தொட்டிலில்
கிடக்கும் குழந்தையைத் தோளில் சாய்த்துத் தாலாட்டுப்பாடி.. அழுகையை ஆற்றுவாள்.'  இந்த இடத்தில் தாய்மை மிளிர தாயன்பு ததும்புவதை எம்மால் உணரமுடிகிறது.... பாலூட்டமுடியாத அவளது மார்பகங்கள் பதறும் நிலை என்பது அதிஉச்ச தாயன்பின் சான்றல்லவா....

அந்தக் குழந்தைக்கான அவர்களின் வாழ்க்கை மாற்றங்கள், அந்தக்குழந்தையின் அன்பில் கரையும் தருணங்கள் என,  கதை தாயின் பாசத்தைப் புலப்படுத்துகின்றது.

வெளிநாட்டு வாழ்க்கையில் திடீரெனச் சிக்கிவிட்ட ஒரு ஆண், எந்த நெருக்கடியிலும் தன்னுடைய சுயத்தை இழக்காமல் இருப்பதென்பது நாம் கண்டு கடக்கும் சம்பவங்களில் ஒன்றேயாகும்.

‘நான் உங்கடை மகளை டிவோஸ் செய்வதற்கு வழக்குத் தொடுக்கப்போறன். அது முடிவுக்கு
வந்ததும் நான் எனது ஊருக்குத் திரும்பிப்போவன். நீங்கள்,  இந்த வீட்டை ,வந்து
பொறுப்பெடுங்கோ,  உங்கடை கடைவேலையையும் விட்டுவிலகி , நான் நண்பனொருவனோடை சென்றுதங்கப்போறன். அவன் கழுவல்வேலைசெய்கின்ற
நிறுவனம் நடத்துகின்றான்.  

உழைத்துச்சீவிக்க உடலிலை வலுவிருக்கு. என்னைப்பற்றிய
கவலையை விட்டுத்தள்ளுங்கோ, உங்களுடைய சுயநலவாத தந்திரபுத்தியைப்பற்றிக் கதைக்கிறதுக்குத் தகுந்தவார்த்தைகள் வாயிலை வருகுதில்லை’   என்றவன் கோபத்தால் உடல் பதறத் தனது தொலைபேசியை
நிறுத்திக்கொண்டான்.

சுயமரியாதை கொண்ட ஒரு ஆணின் தைரியமான வார்த்தைகள் இவை. இந்தக் கதையின் நாயகன் சூரியகுமாரன் இங்கு கைதட்டல் வாங்கிவிடுகிறான்.

சாதி மாறிச் செய்யும் திருமணத்தின் அவலத்தை, அந்தக் கஷ்ட ஜீவனத்தில் வாழும் ஒரு பத்துவயதுப் பாலகனின் மனவலியைச்  சொல்கிறது 'ஆருயிர்கணவரை...;.என்ற படைப்பு,

பலாலியில் நடந்த விபத்தில் கணவர் இறந்த செய்தியை அறிந்ததும் தொகையான ஆட்களோடு
வந்து.. சம்மாட்டியார் சூசைமுத்து இறுதிக் கிரிகைகளைச் சிறப்பாக நடத்தியவர்.
அயலவர்கள் அதிசயித்து நோக்கிநிற்க.. அனைத்தையும் தனது சொந்தச் செலவில் நிகழ்த்தி
முடித்தவர். விடைபெறும்போது,' மகளே அக்கினேசு! இங்கேவா' . என்று அழைத்து ஆறுதல்கூறி என்னைத் தேற்றிவிட்டு.. பணநோட்டுக்களையும் கொடுத்தவர்.

"மகளே! நானும் எனது மனைவியார் பிலோமினாவும் உனக்கு எந்த நேரத்திலும் துணையாக
இருப்பம். ஏதோ இப்படியான துன்பம் நடந்துவிட்டது. கவலையான வாழ்கைதான். உன்னை
நம்பி ஒருகுழந்தை இருக்கின்றது. அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்.
பிலிப்பையா எனக்குத் தம்பிபோல இருந்தவன். 'ஓட்டோ வாங்கி ஓடப்போறன்' என்றான்.
சரியடாப்பா.. உன்னட்டை காசு இருக்குதோ என்று கேட்டபோது. பேசாமல் தலையைச்
சொறிந்தான். பணம் தருவதாகச் சொன்னேன். திடீரென அவனுக்கு இப்படியொரு தீங்கு
வருமென்று யார்கண்டது.
கடற்தொழில் செய்வதில் திறமையான பிள்ளையவன். அதையே செய்திருக்கலாம். ஆண்டவர்
சித்தம் இப்படி நடந்துபோச்சு. சரிபிள்ளை! தைரியாய் இரு. நாங்கள் போட்டுவாறம்"
என்றவர்.. வந்தவர்களோடு தமது வான் வண்டியில் ஏறிப்புறப்பட்டார்.'

இங்கு சம்மட்டியயார் சூசைமுத்து ஒரு உயர்ந்த குணங்கொண்ட மனிதராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான மனிதநேயம் மிக்க மனிதர்களே அன்று எமது சமுதாயத்தின் வழிகாட்டிகளாக இருந்தனர்....

'மர்மச்சதி'  என்பது எதேச்சதிகாரப்போக்கு கொண்ட அரசியல் நிலைவரத்தின் அடிவருடிகளாக  இருந்து எமக்குக் குழிபறிப்பவர்களைப்பற்றிச் சொல்கிறது,  காதலும் அதன் வலியும் கயமை கொண்டவர்களின் மர்மச்சதியும் இக்கதையில் பின்னிக்கிடக்கின்றது.

இன்றைய பண்பாட்டு  மாற்றம், வாள்வெட்டுக் கலாசாரம், விதவை மறுமணம், மனிதநேயத்தை மதிக்கும் பண்பு, இச்சைக்கு முன்னால் தோற்றுப்போகும் கடமையும் உண்மைகளும் .....பெற்றவர்களைத் தவிக்கவிட்டு பொருளீட்ட நகரும் பிள்ளைகளின் மனநிலை, முதியோரின் தனிமை, பிள்ளைகள் இருந்தும் அநாதையாகித்தவிக்கும் ஏக்கம், என அவர் தொட்டுள்ள ஒவ்வொரு கருவும் சமூகத்துடன் ஒன்றிப்போனவையே....

சகுந்தலா தந்து துயர்....என்ற கதை, ஒரு காதலியின் பச்சோந்திக் குணத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

துறவு...நாம் நேசிப்பவர்களுக்காக எமது ஆசாபாசங்களை, ஆடம்பரங்களைத் துறப்பதைவிட பெருந்துறவு வேறென்ன இருக்கிறது என்கிறார் கதாசிரியர்.

'சுமைதாங்கித்தூண்',  'சங்கடப்படலை'  என எமது மூதாதையர்கள் சமூக நலன்கருதி மேற்கொண்ட விடயங்களை இங்கு எடுத்தியம்பியுள்ளார். இன்றைய எமது சந்ததி அறியாத சொற்கள் இவை.


இவர், பாசம், நேசம், தியாகம், பவித்திரமான வாழ்க்கை,  பனிநிலத்தின்  வலிகள் இவற்றை எல்லாம் தனது படைப்புகளினூடே ஆழமாகப் பதித்துள்ளார்.

எழுத்தாளர்கள் மனித ஆன்மாக்களின் பொறியாளர்கள்  என்கிறார் ஜோசப் ஸ்டாலின். அது உண்மைதான். ஒரு படைப்பாளனால்தான் சமூக நுண்துணிக்கையிலிருந்து ஒரு படைப்பை உருவாக்கமுடியும். சில கதைகளை வாசிக்கும் போது அந்தந்த இடங்களில் நாமும் வாழ்வதாக மனம் அர்த்தப்படுத்திக்கொண்டது. நீர்கொழும்பின் புறநகர்ப்பகுதியில் நின்று திரும்பிய உணர்வைத் தந்தது நீர்கொழும்பிலே சிறுகதை....

'சுருக்கமற்ற இளமையை விட அனுபவமும் வாழ்வை அர்த்தமாக்கிய திருப்தியும் கொண்ட முதுமை,  கண்களை மட்டுமல்ல மனதையும் திறக்கவைத்துவிடும்' என்பது அனுபவ மொழி. இந்தப் படைப்பும் அவ்வாறே மனதில் சில தாக்கங்களைத் தூண்டிவிட்டு, சமுதாய நலனைச் சிந்திக்கவைக்கிறது.

தக்கதே இந்த உலகத்தில் நிலைக்கிறது, ஆற்றெழுக்கைப்போல தடையற்ற இந்த இந்தத் தொகுப்பின் வெளிப்பாடு என்றும் பேசப்படும்....

மீண்டும் எனது கரங்களை அவர் பாதம் தொட்டு மானசீகமாய் வணங்கி. இந்தப் பெரும்பேறான வாய்ப்பை எனக்கீந்தமைக்காக எழுத்தாளர், தந்தையார்  கிருஷ்ணசிங்கம் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் நன்றி பகர்ந்து இவ் உரையை நிறைவு செய்கிறேன்.... இந்நூல் மீண்டும் என்னை எண்பதுகள் கடந்த நாட்களுக்கு அழைத்துச்சென்றதென்றால் மிகையல்ல.....

என்றும் அன்புடன்
கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.