கவிதை....!!

 பூக்கும் அன்பு 

புனிதப்படும் நேரங்களில் 

ஆக்கி மிளிர்கிறது

கவிதை. 

 

செந்நீர் சிந்திய 

சிலுவைக் காடுகளில்

 சிதறித் தெறிக்கிறது

கவிதை.

 

கல்வாரியின்

குருதிக் கசிவுகளில்

ஓலமிடுகிறது 

கவிதை. 


 பூமி தொடாத

பிள்ளை மொழியில்

மெல்லெனச் சிரிக்கிறது 

கவிதை.


தாளம் தவறிய

இசையிலும்

கோலமிடுகிறது

கவிதை.


எண்ணத் தீமிதித்து

எழுகின்ற கவிதைகள் 

அங்குமிங்குமாய் 

ஆலாபனை செய்கிறது.


களங்கமற்ற அன்பிலும் 

கர்வமற்ற அறிவிலும்

கபடமற்ற புன்னகையிலும்

கவிதை...


கால நதியில்

கைபிடித்து நடந்து

இதமாய்

சேவகம்  செய்கிறது கவிதை. 


என்னை நகலெடுத்த 

உனக்கு 

இன்று விழா நாளாம்..


மோகனமே..

நீ பூரித்திரு...

இதோ உனக்காக உதிர்கிறது

என் வண்ண மலர்கள்....

கவிதையாக...


கோபிகை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.