இனஅழிப்பிற்குள் நின்றுகொண்டு, நம் சந்ததியிற் சிலர் தாயகத்தில் பயணிப்பதே ஓர் போர்த்திறன்தான்

 


ஜெயகாந்த் புவிசார் அரசியல் போரியல் அண்ணையின் பதிவின்கீழ், தமிழர்களின் மரபணுவிலிருந்து போ*ர்*த்திறன்  நீங்கிவிட்டதா என்ற பொருள்பட வெ முத்து ராமன் என்ற அண்ணையொருவர் கேட்டிருந்தார்.


நிற்க..!


நேற்று மாலையளவில் பிர.சட்டகம் நூலாசிரியர் கலாநிதி சேது என்னை அழைத்தார். "கொஞ்ச நாளாவே நிறைய மனஅழுத்தமாக இருக்கு தேவன்" என ஆரம்பித்தவர், "தமிழ்மக்கள் ஈழ/போராட்ட/விடுதளைச் சிந்தனைகளிலிருந்து தம்மைத் தொலைவாக்குகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது" என மிகுந்த ஆதங்கத்தோடு உரையாட, எனக்கு நடுக்கம் பிடித்துவிட்டது. ஏனெனில் இங்கே மென்டிஸ் ஐயா அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது. "Distancing themself from the struggle is the most unexpected thing, but have to move on" என்றே அதே தொனிப்பட கலாநிதி சேது அவர்களும் சொல்ல, எவ்வாறு எல்லாச் சிந்தனையாளரும் ஒரே நேர்கோட்டில் வருகிறார்கள் என எண்ணிக் குழப்பமடைந்துவிட்டேன். 


புலம்பெயர்ந்த நாட்டில் தவிபுகளுக்கு நிதி திரட்டியவர்களே, தவிபுகளைத்  தீ*வி*ர*வாதி-கள் என ஒப்புக்கொடுத்தது தொடங்கி, தேசியக்கொடி வேறு தவிபு வேறு என்பது வரையான அனைத்துமே "Distancing our self" (எம்மை நாமே அந்நியப்படுத்தல்) என்பதற்குள் வந்துவிடும். அதைவிடவும் தாயகத்தில் வாள்வெட்டு, கஞ்சாநுகர்வு, திருட்டு, சிங்களஅரசோடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது கூட்டு என்பனவற்றின் மொத்தப் பார்வையே கலாநிதி சேது தொடங்கி திரு. முத்துராமன் வரையான இனப்பற்றாளர்களை மனஉளைச்சலுக்குள் தள்ளிவிடக்கூடியன. 


அதேநேரத்தில், "Have to move on" என்பது இன்னொரு பக்கம் விரிந்துகிடக்கிறது. அழிந்தாலும், அழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் சிலவற்றையாவது விதைத்து வைத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற அவா, எம்மைப் பலதடவை மன உளைச்சல்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. 


தமிழர்களின் "போர்த்திறன்" மட்டும் அற்றுப்போகவில்லை, போர்த்திறன் கொண்ட சிந்தனைப் பாதையிலிருந்தே தமிழர்கள் பலர் தம்மைத்தாமே அந்நியப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனாலும் இன்னும் எண்ணி பத்துவருடங்களுக்குள் "சிலவயல்களையாவது உழுது விதைத்துவிடலாம்" என ஓடிக்கொண்டிருப்பதே எமது இன்றைய அவா, அதையாவது வேகமாகச் செய்வோம் என்பதை கலாநிதி சேது அவர்களோடு பகிர்ந்தேன்.


பிர.சட்டகம் எனும் மாபெரும் சிந்தனைப்பாய்ச்சலுக்குப் பிறகு, அவர் *பு*லி*ப்*பண்*பா*டு  எனும் தொகுப்பை, ஆழ்ந்து எழுதிக்கொண்டிருப்பதன் வெளிப்படே இந்த மனஉளைச்சலாக இருக்கக்கூடும். உலகத்தத்துவ மேதைகளையும், கோட்பாடுகளையும், போர்க்கதைகளையும் தினந்தோறும் வாசிக்கும் நபராக கலாநிதி சேது இருப்பதால்;  "உலகிலுள்ளவற்றையெல்லாம்  விடவும்  மிக அதீதமாகத் தமிழர்களின் தலைமை  கட்டியெழுப்பியவற்றிலிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு செல்கிறார்களே" எனும் சிந்தனையின் வெளிப்பாடு அவருக்குள் இந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும். 


ஆனாலும் நமக்குள்ளான உரையாடல் நிறைவெய்தி, "நிறைய எழுதவேண்டும் தேவன்" என அவர் விடைபெற்ற தருவாயில் அவருக்கு ஏற்பட்டது மனஉளைச்சல் அல்ல, சிறு தளர்வுதான் என்பதை உணர்ந்தேன். 


உலகத்தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை நந்திக்கடலிலிருந்துதான் ஆரம்பிக்கும். அடுத்த சந்ததியை அங்கிருந்து பயணிக்கச்செய்வதற்கான பாதையை நாமனைவரும் செப்பனிட்டுக்கொடுத்தாலே போதும். தமிழக உறவுகளும் இதை நோக்கியே நகரவேண்டும்.


இன்று நடைபெறும் இனஅழிப்பிற்குள் நின்றுகொண்டு, நம் சந்ததியிற் சிலர் தாயகத்தில் பயணிப்பதே ஓர் போர்த்திறன்தான். அது சிலநேரங்களில் அமைதிபேணுமே தவிர, முற்றாக மடிந்துவிடாது.


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.